மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட 130வது ஆண்டை நினைவு கூறும் வகையில் விவசாயிகள் லோயர்கேம்ப் மணிபண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் அணையின் கட்டுமான பணியை 1885ல் துவக்கி 1895ல் முடித்தார். முடிக்கப்பட்ட அதே ஆண்டில் அக்.10ல் தமிழகப் பகுதிக்கு முதன் முதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது 130 ஆண்டு ஆகிறது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் நேற்று லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் விவசாயிகள் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர். தொடர்ந்து குறுவனத்துப் பாலத்தில் முல்லைப் பெரியாறு தண்ணீரை வரவேற்கும் விதமாக மலர் துாவினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்க செயலாளர் ரஞ்சித் குமார், துணைத்தலைவர் ராஜீவ், மாவட்ட தலைவர் ஜெகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் காசிராஜன், துணைச் செயலாளர் மகேஸ்வரன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொறுப்பாளர் கணபதி, செயலாளர் குணசேகரன், பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் மனோகரன், பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் பாபு, செயலாளர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் ராஜா, செயலாளர் தெய்வம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
16-Sep-2025