ஒட்டான்குளம் கண்மாய் கரையில் குடிமகன்களால் சுகாதாரக் கேடு
கூடலுார்: ஒட்டான்குளம் கண்மாய் கரையில் குடிமகன்களால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இக்கண்மாயின் கரைப்பகுதி ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். விளைநிலங்களுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கண்மாய் கரையில் கடந்த ஆண்டு நகராட்சி சார்பில் தார் ரோடு அமைக்கப்பட்டது.கரையில் தினந்தோறும் குடிமகன்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு மது பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் கரைப் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். தற்போது முதல் போக நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் அமைத்து நடவு செய்வதற்கு வயல்களை தயார் படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வயல்களுக்குச் செல்லும் பெண் தொழிலாளர்கள் கரைப்பகுதியில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க நகராட்சி சார்பில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கண்காணிப்பு பணிக்காக ஊழியர்களை நியமிப்பதாக அறிவித்தது. ஆனால் இதுவரை இதற்கான நடவடிக்கை இல்லை.