முருங்கை சாகுபடியை ஊக்குவித்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கம்பம்: முருங்கை சாகுபடியை ஊக்குவித்து ஏற்றுமதியை அதிகரிக்க விவசாயிகள் முருங்கை குழுமத்தில் இணைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். முருங்கை மருத்துவ குணம் கொண்டது. அதன் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது.தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் முருங்கை அதிகமாக சாகுபடியாகிறது. எனவே மதுரையை மையமாக வைத்து அதிக சாகுபடியாகும் மாவட்டங்களை இணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டங்களில் உள்ள முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுமம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. வரும் 5 ஆண்டுகளில் முருங்கை மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை, ஏற்றுமதி மூலம் ரூ.500 கோடி வருவாய் ஈட்ட வேளாண் துறை திட்டமிட்டு கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கென ரூ. 1 கோடியில் மதுரையில் மையம் ஒன்று துவக்கப்பட்டது. ஆனால் முருங்கை அதிகம் சாகுபடியாகும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இந்த குழுவில் சேர ஆர்வம் காட்டவில்லை. எனவே முருங்கை விவசாயிகளை இந்த குழுமத்தில் இணைத்து முருங்கை சாகுபடியை அதிகரிக்கவும், முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரித்து ஏற்றுமதி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக வேளாண் துறையினர் கூறுகையில், முருங்கை கிளஸ்டரில் சேர விவசாயிகள் முன்வர வேண்டும். பல்வேறு வசதிகளுடன் ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க தேவையான இயந்திரங்கள் வசதிகள் ஏற்படுத்த உள்ளனர். தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளார். முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் துவங்க உள்ளது என்றனர்.