உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரதவீதிகள் சேதமடைந்துள்ளதால் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்; உத்தமபாளையத்தில் வீதிகள் சீரமைக்க வலியுறுத்தல்

ரதவீதிகள் சேதமடைந்துள்ளதால் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்; உத்தமபாளையத்தில் வீதிகள் சீரமைக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம்; உத்தமபாளையத்தில் ரத வீதிகளில் குழாய் பதிக்க தோண்டி, குண்டும் குழியுமாக உள்ளதால் தேரோட்டம் நடத்துவதற்கு வீதிகள் தகுதியாக இல்லை. எனவே, ரத வீதிகளை சீரமைக்கும் பணிகளை பேரூராட்சி துவக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இங்குள்ள காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கோயில் ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் உள்ளது. தம்பதி சகிதமாக ராகுவும் கேதுவும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.இது காலசர்ப்ப தோஷ தலமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இக்கோயிலில் நடைபெறும் ராகு கேது பூஜைகளில் வெளி மாவட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.60 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாமல் இருந்த தேரை 15 ஆண்டுகளுக்கு முன், ஊரில் உள்ள அனைத்து சமூகத்தினர் சேர்ந்து பராமரிப்பு செய்து, தேரோட்டம் நடத்தினார்கள். அதன்பின் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெற்றது. கடைசியாக 2020 க்கு பின் கடந்த 4 ஆண்டுகளாக தோரோட்டம் நடைபெறவில்லை.இந்தாண்டு மாசி மாதம் தேரோட்டம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறையும், அனைத்து சமுதாயங்களை சேர்ந்தவர்களும் முடிவு செய்துள்ளனர். ஆனால் தேரோட்டம் நடத்துவதற்கு ரத வீதிகள் ஏற்றதாக இல்லை.பேரூராட்சி வட்டாரங்கள் கூறுகையில் , ரத வீதிகளின் இரு புறமும் குழாய் பதிக்க தோண்டப்பட்டுள்ளது. ரதவீதிகளை சீரமைக்க ரூ.3 கோடி தேவைப்படும். பேரூராட்சியில் அந்த அளவிற்கு நிதி இல்லை. பேரூராட்சி ரூ.1 கோடி செலவழிக்கலாம். பொறியாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.தேரோட்டம் நடத்துவதற்கு தேவையான ரோடு வசதியை செய்து தர வேண்டியது பேரூராட்சியின் கடமையாகும். அதை நிறைவேற்ற வேண்டும் என அனைத்து சமுதாயத்தினரும் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ