உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டட அனுமதி வழங்க இழுத்தடிப்பு! கூடுதல் மின் கட்டணத்தால் நிதி இழப்பு 

தேனி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டட அனுமதி வழங்க இழுத்தடிப்பு! கூடுதல் மின் கட்டணத்தால் நிதி இழப்பு 

தேனி: தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டட அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கூடுதல் மின் கட்டணம் கட்டும் நிலை ஏற்பட்டு அரசுக்கு நிதி இழப்பு தொடர்கிறது. பெரியகுளம் ரோட்டில் தேனி ஒன்றிய அலுவலகம் ரூ.3.12 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆனால், ஒன்றிய அலுவலகத்திற்கு இதுவரை வணிக பயன்பாட்டிற்கான 'டேரிப் 5' மின் இணைப்பு வழங்கவில்லை. கட்டுமான பணிக்கு வழங்கப்படும் 'டேரிப் 6' மின் இணைப்பை ஓராண்டிற்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாதந்தோறும் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்துகின்றனர். நகராட்சி, மின்வாரிய, அதிகாரிகள் கட்டுமான அனுமதி வழங்காததால் மாதந்தோறும் ரூ.20ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கூடுதல் மின் கட்டணம் செலுத்தி வருவதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் புலம்புகின்றனர். மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா கூறுகையில், 'கட்டத்தின் உயரம் 300 ச.மீ.,க்கு மேல் இருந்தால் நகராட்சி கட்டுமான அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள் சான்றிதழ் வழங்கினால் வணிக மின் இணைப்பாக மாற்றித்தரப்படும்,' என்றார். நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சலீம் கூறுகையில், 'உள்ளாட்சி அமைப்புகள் 2ஆயிரம் ச.அடிக்குள் இருந்தால் கட்டுமான சான்று வழங்கும். அதற்கு மேல் இருந்தால் மாவட்ட நகரமைப்புத்துறையினர் தொழில்நுட்ப சான்று வழங்க வேண்டும். தொழில்நுட்ப சான்று கேட்டு அந்த துறையினருக்கு கடிதம் அனுப்பி பல மாதங்கள் ஆகிறது,' என்றார். மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் ரேஷ்மா கூறுகையில், 'தேனி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டுமான, தொழில்நுட்ப அனுமதி கோரி ஆலோசனை மட்டும் செய்தனர். ஆனால், இதுவரை விண்ணப்பிக்கவில்லை. ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு மட்டும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ