உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை அருகில் இருந்தும் குடிநீரின்றி தவிப்பு; குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால் திருமலாபுரம், கோவில்பட்டி ஊராட்சிகளில் தட்டுப்பாடு

வைகை அணை அருகில் இருந்தும் குடிநீரின்றி தவிப்பு; குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால் திருமலாபுரம், கோவில்பட்டி ஊராட்சிகளில் தட்டுப்பாடு

ஆண்டிபட்டி : குன்னூர் வைகை ஆறு, வைகை அணை எட்டிப்பார்க்கும் துாரத்தில் இருந்தும் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் திருமலாபுரம், கோவில்பட்டி ஊராட்சிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.ஆண்டிபட்டி ஒன்றியம், திருமலாபுரம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட க.விலக்கு கடந்த சில ஆண்டுகளில் விரிவாக்கம், வளர்ச்சி கண்டுள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணா கூட்டுறவு நூற்பாலை, தனியார் மில்கள், குவாரிகள், கிரஷர்கள் இப்பகுதியில் செயல்படுகின்றன. படிப்பு, தொழில், வேலைவாய்ப்பு தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் க.விலக்கு பகுதிக்கு பலரும் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு ரோடு, போக்குவரத்து வசதி போதுமான அளவு இருந்தும் குடியிருப்பு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவில்லை. குடிநீருக்கே அன்றாடம் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

விலைக்கு வாங்கும் குடிநீர்

எம்.ராஜாங்கம், க.விலக்கு: கோவில்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட இப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. பொதுமக்கள் பிரச்னை குறித்து ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஒரு குடம் குடிநீரை ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். குடிநீர் மேல்நிலைத்தொட்டி கூட இல்லை. கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து குடிநீர் வந்தது. வைகை அணையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் க.விலக்கு பகுதியை கடந்தே செல்கிறது. ஆனால் இப்பகுதிக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

ஐந்து மாதங்களாக குடிநீர் வரவில்லை

அருண், க.விலக்கு: கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் அதிக குடியிருப்புகள் உள்ளன. வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. குடிநீர் 5 மாதமாக வரவில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளனர். ஜல் ஜீவன் திட்டத்திலும் குழாய் பதித்தும் அத்திட்டம் மூலம் வினியோகம் இல்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.

ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துங்கள்

ஆனந்தி, க.விலக்கு: இங்குள்ள குடியிருப்பு பகுதி திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்டுள்ளது. அரப்படித்தேவன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் காலாவதி ஆகிவிட்டதா என்று தெரியவில்லை. இங்குள்ள தரைமட்ட தொட்டி, மேல்நிலைத்தொட்டிகளில் நீர் ஏற்றி பல மாதம் ஆகிறது. வாகனங்களில் கொண்டுவரப்படும் 5000 லிட்டர் நீரை ரூ.900 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களும் உள்ளனர். ஜல் ஜீவன் திட்டத்திலாவது குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வைகை அணை, குன்னூர் ஆற்றில் இருந்து பல கி.மீ., தூரத்திற்கு அப்பால் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது. இங்குள்ளவர்கள் குடிநீருக்கு தவிக்கிறோம். இவ்வாறு கூறினர்.

குடிநீர் வாரியம் அலட்சியம்

திருமலாபுரம், கோவில்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: குடிநீர் குழாய் பராமரிப்பு மற்றும் வினியோகம் குடிநீர் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குன்னூர் பம்பிங் சென்டரில் பழுதான மின் மோட்டார் சரி செய்யப்படாததால் வினியோகம் பாதித்துள்ளது.தற்போது போர்வெல் நீர் மட்டுமே க.விலக்கு பகுதி மக்களுக்கு கை கொடுக்கிறது. ஜல் ஜீவன் திட்டமும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் தொடர்ந்து வர குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ