கலெக்டர் உத்தரவிட்டும் அரசு பஸ் இயக்க மறுக்கும் அதிகாரிகள் விளையாட்டு விடுதி மாணவர்கள் சிரமம்
தேனி:தேனி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் அல்லிநகரம் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி செய்திட கலெக்டர் உத்தரவிட்டும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பஸ் இயக்க மறுப்பதால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் இயங்கும் அரசு மாணவர் விளையாட்டு விடுதி உள்ளது. இதில் தற்போது 85 மாணவர்கள் தங்கி பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்ல அரசு பஸ் சேவை இல்லாததால் 60 பேர் ஒரு மாணவருக்கு மாதம் ரூ.800 செலவழித்து தினமும் மினிபஸ்சில் அல்லிநகரம் மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். மீதமுள்ள 25 பேர் தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அவர்களும் ஆட்டோவிற்கு பணம் செலவு செய்து தினசரி பள்ளி செல்கின்றனர். இதனால் காலை 8:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புறப்பட்டு தேனி புதுபஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக அல்லிநகரம், அன்னஞ்சி வரை உள்ள வழித்தடத்தில் ஒரு அரசு பஸ்சும், மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் அன்னஞ்சியில் புறப்பட்டு அதே வழித்தடத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் வந்து சேர அரசு பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோருகின்றனர். இக்கோரிக்கை குறித்து மூன்று முறை மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது. அவரும் பஸ் சேவை உடனடியாக துவங்க போக் குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இச்சேவை துவக்கப்படாமல் மாணவர்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.