பீர்மேடு பெண் இறப்பில் வனத்துறை போலீசார் இடையே கருத்து வேறுபாடு
மூணாறு: பீர்மேடு அருகே வனத்தினுள் பெண் இறந்த சம்பவத்தில் வனத்துறை, போலீசார் ஆகியோர் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் நிலையில் காட்டு யானை தாக்கி பெண் இறந்ததாக போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் தோட்டப்புரா பகுதியைச் சேர்ந்த பினு 54, தனது மனைவி சீதா 50, வுடன் ஜூன் 13ல் வன விளை பொருட்களை சேகரிப்பதற்கு வனத்தினுள் சென்றார். சபரிமலை வனத்திற்கு உட்பட்ட மீன்முட்டி வனத்தினுள் சென்றபோது தன்னையும், மனைவியையும், காட்டு யானை தாக்கியதாக பினு உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இருவரும் மீட்கப்பட்டு பீர்மேடு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தபோது சீதா இறந்ததாக தெரியவந்தது. குழப்பம்: அவரது உடல் ஜூன் 14ல் டாக்டர் ஆதர்ஷ் ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் சீதா காட்டு யானை தாக்கி இறக்கவில்லை என டாக்டர் தெரிவித்தார். அதே கருத்தை வனத்துறையினரும் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. விசாரணை: பீர்மேடு டி.எஸ்.பி. விஷால்ஜான்சன் தலைமையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை, சம்பவ இடத்தின் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் யானை தாக்கி சீதா இறந்ததாக அறிக்கை தயாரித்தனர் வனத்துறை, போலீசார் ஆகியோர் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வரும் நிலையில் காட்டு யானை தாக்கி சீதா இறந்ததாக போலீசார் பீர்மேடு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.