உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கனிமவள நிதி பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு; மாவட்ட நிர்வாகம் மீது ஊராட்சி தலைவர்கள் அதிருப்தி

கனிமவள நிதி பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு; மாவட்ட நிர்வாகம் மீது ஊராட்சி தலைவர்கள் அதிருப்தி

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு கனிமவளத்துறை மூலம் நிதி ஆதாரம் கிடைக்கிறது. ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்குவாரி, மண் குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் கனிமங்களின் வருவாயில் குறிப்பிட்ட தொகை ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க வேண்டும். கனிமவளத்துறை மூலம் சில ஊராட்சிகளுக்கு அதிகபட்சமாக ரூபாய் இரண்டு கோடி வரை நிதி ஆதாரம் கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் கனிம வள நிதியில் ஊராட்சியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கடந்த காலங்களில் ஊராட்சி நிர்வாகம் மூலம் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகள் ஒப்புதலுடன் பணிகள் நடந்தது.இந்த ஆண்டும் தேனி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கனிம வள நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. வரவு வைக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் ஊராட்சிகளில் வடிகால் வசதி, சிறுபாலம், பேவர்பிளாக், குடிநீர் மேம்பாடு உட்பட பல்வேறு பணிகளை தேர்வு செய்துள்ளனர். ஊராட்சிகளில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக ஊராட்சித் தலைவர்கள் புலம்புகின்றனர். தற்போதுள்ள ஊராட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிகிறது. இதனை மனதில் வைத்து தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக ஊராட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ