உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுக்குடிநீர் முழுமையாக வராததால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் டி.வாடிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி சிரமம்

கூட்டுக்குடிநீர் முழுமையாக வராததால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் டி.வாடிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி சிரமம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், டி.வாடிப்பட்டியில் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் குறைந்தளவு குடிநீர் விநியோகிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் உவர்ப்பு நீரை பருகி உடல் உபாதைகளால் சிரமப்படுகின்றனர். பெரியகுளம் ஒன்றியம் டி. வாடிப்பட்டிஊராட்சியில் 6வார்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர் .இங்கு சாக்கடை வசதி, சுகாதார வளாகம், ரோடு வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள குயவர் ஊரணி பாசிபடர்ந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து தூர்வாரிட வேண்டும் என்ற பொதுமக்களி ன் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது. கிராம மக்கள் கூறியதாவது: குடிநீர் தட்டுப்பாடு விஜயலட்சுமி, டி.வாடிப்பட்டி: வடக்கு காலனியில் குடிநீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுவதால் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினால் இந்த ஊராட்சிக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் பாதியளவு மட்டுமே வழங்குகின்றனர் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். முழுஅளவு குடிநீர் வழங்குவதற்கு வாரியத்திற்கு ஊராட்சி நிர்வாகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும் குடிநீர் வழங்க வேண்டும். போர்வெல் தண்ணீரை குடித்து பொதுமக்கள் உடல் உபாதையால் அவதிப்படுகின்றனர். புறக்கணிக்கப்பட்ட தெரு, சூராயி, டி.வாடிப்பட்டி: பிள்ளையார் கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனை அகற்றிவிட்டு பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. தெருக்களில் அமைக்கப்பட்ட சாக்கடை பாலம் ஒன்றுக்கொன்று முறையாக இணைக்காமல் உள்ளது. இதனால் சாக்கடையின் மேற்பகுதி பாம்புகள் தங்கியுள்ளது. பாம்புகள் சாதாரணமாக தெருக்களில் செல்கிறது. இதனால் பயத்தில் உள்ளோம். ஊராட்சி நிர்வாகம் சாக்கடை பாலம் அமைத்து, சாக்கடையை சுத்தம் செய்து விஷபூச்சிகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடு சீரமைக்க வேண்டும் பழனிசாமி, டி.வாடிப்பட்டி: இந்திரா காலனியில் நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். நுழைவு பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதி வரை 800 மீட்டர் தூரத்திற்கு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்தபகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். காலை முதல் மாலை வரை வேலைசெய்து விட்டு, குண்டும் குழியுமான ரோட்டை கடந்து வீட்டிற்கு செல்வதற்கு சிரமப்படுகிறோம். இதனால் பலரும் நடந்தும், சைக்கிள், டூவீலரில் ரோட்டை கடப்பதற்குள் கால் வலி, இடுப்பு வலியால் அவதிப்படுகிறோம். இது குறித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். ஒன்றிய பி.டி.ஓ., க்கள் இந்த ரோட்டினை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ