கண்மாயில் நீர் தேங்காததால் தரிசாகும் விளை நிலங்கள் ஏத்தக்கோவிலில் விவசாயத்தை தொடர முடியாத அவல நிலை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தக்கோவில் கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இப்பகுதியில் உள்ள பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இக்கண்மாய்க்கு வாசிமலை , கள்ளக்கணவாய், வேட்டைக்கார சுவாமி ஓடை, கும்பப்புளி பகுதியில் இருந்து மழைக்காலத்தில் அதிக நீர் வரத்து கிடைத்தது. கண்மாயில் தேங்கும் நீரால் 100 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்றது. பராமரிப்பில்லாத நீர்வரத்து ஓடையில் பல ஆண்டுகளாக போதுமான நீர் வரத்தின்றி ஒவ்வொரு ஆண்டும் கண்மாய் வறண்டு விடுகிறது. விவசாயம் கால்நடை வளர்ப்பு மட்டுமே நம்பி இப்பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தடுப்பணைகளால் வறண்ட கண்மாய்
தனிக்கொடி, ஏத்தக்கோவில்: 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நீர் தேங்கிய கண்மாயில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் வெட்டுப்பள்ளங்களில் மட்டுமே நீர் தேங்குகிறது. கண்மாய் ஒரு முறை நிரம்பினால் நேரடி பாசனத்தில் ஒருபோகம் நெல் சாகுபடி செய்ய முடியும். நிலத்தடி நீரால் இரண்டாம் ேபாகத்திற்கும் வாய்ப்பு இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மழை காலம் முடிந்த பின்பும் மூன்று மாதங்கள் வரை ஓடைகளில் வரும் நீர் கண்மாயில் தேங்கியது.நீர்வரத்து ஓடையில் பல இடங்களில் வனத்துறை மூலம் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் கண்மாய்க்கான நீர்வரத்து குறைந்து விட்டது. மணற்பாங்கான கண்மாய்க்கு தொடர்ச்சியான நீர் வரத்து இருந்தால் மட்டுமே நீர் தேங்கி நிற்கும். குறைவாக வரும் நீரை மணல் பரப்பு உறிஞ்சி விடுவதால் தேங்கிய நீர் விரைவில் வற்றி விடுகிறது. மழைக்காலம் துவங்கும் முன் நீர்வரத்து ஓடைகளை தூர் வாறுவதுடன், கண்மாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளையும் அகற்ற வேண்டும். நீராதாரம் குறைந்ததால் கால்நடை வளர்ப்பு நசிவு
சுந்தரம், ஏத்தக்கோவில்: கடந்த காலங்களில் கண்மாய் மறுகால் பாய்ந்து உபரிநீர் ஆண்டிபட்டி எட்டுக்கண் பாலம் வழியாக வைகை ஆற்றுக்கு சென்றது. கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி, மேக்கிழார், ஆண்டிபட்டி, வண்டியூர் பாலக்கோம்பை பகுதிகளிலும் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். தற்போது இக்கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளதால் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் நசிந்து வருகிறது. பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்ப கவுண்டன்பட்டியில் இருந்து வாய்க்கால் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்களில் தேக்குவதாக தி.மு.க.,வினர் கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தனர். தேர்தலுக்குப் பின் 4 ஆண்டுகள் முடிந்தும் அதற்கான முயற்சி இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடியும் அரசு நடவடிக்கை இல்லை. தொழில் வளம் குறைந்த ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழிலை மேம்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.