அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு தினமலர் செய்தி எதிரொலியால் மீண்டும் திறக்கப்பட்டது. சின்னமனூர் மற்றும் அதை சுற்றியுள்ள மார்க்கையன்கோட்டை, குச்சனூர், மேகமலையில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ தேவைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட விபத்து அவசர சிகிச்சை பிரிவு பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக மருத்துவ அலுவலர் அவசர சிகிச்சை பிரிவை திறக்க உத்தரவிட்டார். மருத்துவ அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், 'நோயாளிகள் இல்லாததால் இப் பிரிவு பூட்டி வைக்கப்பட்டது. தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு டாக்டர் நியமனம் செய்து பிரசவங்கள் நடைபெறுகிறது. கடந்த மாதம் 8 பிரசவங்கள் நடந்துள்ளது. பிரசவ வார்டு முழு வீச்சில் செயல்பாட்டில் உள்ளது,' என்றார்.