காலாவதியான குடிநீர் பாக்கெட் போடியில் விற்பனை படுஜோர்
போடி: போடி பகுதியில் காலாவதியான, ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத குடிநீர் பாட்டில் விற்பனை படுஜோராக விற்கப்படுவதால், அவற்றை வாங்கி பருகும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருமண, வசந்த விழாக்களும் நடந்து வருகின்றன. வெப்பத்தின் தாக்கத்தை போக்கும் வகையில் குடிநீர் பாக்கெட், குடிநீர் பாட்டில் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை பயன்படுத்தி போடி நகர் பகுதி மட்டும் இன்றி, கிராமப் பகுதிகளில் உள்ள சில கடைகள், டாஸ்மாக் பார்களிலும் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர்.சில பகுதிகளில் காலாவதியான, தரமற்ற குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வதால் வாங்கி பருகும் மக்களுக்கு சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வருகின்றன. தரமற்ற, காலாவதியான குடிநீர் பாட்டில் விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்வதோடு, உரிய நபர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நகராட்சி சுகாதார அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.