உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு அமைக்க தடையில்லா சான்று வழங்காததால் விவசாயிகள் சிரமம் மேல்மங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி அவதி

ரோடு அமைக்க தடையில்லா சான்று வழங்காததால் விவசாயிகள் சிரமம் மேல்மங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி அவதி

தேவதானப்பட்டி: மேல்மங்கலம் - அழகர்நாயக்கன்பட்டி இடையே 3.5. கி.மீ., ரோடு அமைக்க நீர்வளத்துறை தடையில்லா சான்று வழங்காததால் இரு ஆண்டுகளாக விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மூன்று அக்ரஹாரம் தெருக்கள், அம்மாபட்டி தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, சவுராஷ்டிரா தெரு உட்பட பல தெருக்கள் உள்ளது. வடுகபட்டி -மேல்மங்கலம் ரோடு கல்லுக்கட்டு பஸ்ஸ்டாப் அருகே சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வினியோகம் செய்யும் குடிநீர் குழாய் சேதமாகி பல நாட்களாக ரோட்டில் வீணாகிறது. இதனால் முதல் வார்டு பிள்ளைமார் தெருவில் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது. கால்நடை வளர்ப்போர் தண்ணீர் தட்டுப்பாட்டால் டேங்கர் லாரியில் நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வார்டில் பயன்பாடு இல்லாத திறந்தவெளி கிணறு ஆபத்தான நிலையில் உள்ளது. திறந்த வெளி கிணற்றுக்கு இரும்பு வலையில் மேல்மூடி அமைக்க பல கிராமசபைகளில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் நடப்பதற்குள் கிணற்றுக்கு மேல்மூடி அமைக்க வேண்டும். பஸ்ஸ்டாப் அருகே ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மின் மோட்டார் பழுதாகி தண்ணீர் வசதி இன்றி திறந்த 4 நாட்களில் மூடப்பட்டது. மின்மோட்டார் சீரமைக்கததால் சுகாதர வளாகம் முடங்கி உள்ளது. ஒன்றாவது வார்டு குழந்தைகள் மையம் அருகே நடைபாதை சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. அதில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேல்மங்கலம் ராஜவாய்க்கால் முதல் அழகர்நாயக்கன்பட்டி பிரிவு வரை 3.5 கி.மீ., வரை ரோடு அமைப்பதற்கு நீர்வளத்துறையில் தடை இல்லா சான்று பெற வழங்கப்பட்ட விண்ணப்பம் இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரோடு பணி செய்ய தயார் நிலையில் உள்ளனர். என்ன காரணத்தினாலோ நீர் வளத்துறை காலதாமதம் செய்வதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இடியும் அபா யத்தில் நுாலகம்

வெங்கட்ராமன், ஆடிட்டர், மேல்மங்கலம்: கிராமப்புற மாணவர்கள், பட்டதாரிகள் அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற நூலகம் உள்ளது. என்னைப் போல் பலருக்கும் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்த நூலகம் 1966ல் துவங்கப்பட்டது. நூலகம் முன்பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுப்பும் முட்செடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறியுள்ளது. தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. வராகநதி கரையோரம் நடைபயிற்சியாளர்களுக்கு 'ரிவர் வியூ' அமைக்க வேண்டும். அக்ரஹாரம் தெருக்களில் வடிகாலில் துாய்மை பணி செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.

இலவ மரத்தால் பள்ளிக்கு ஆபத்து

பாண்டியன், மேல்மங்கலம்: மேலத்தெரு கடைவீதி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4, 5ம் வகுப்பறை மேற்கூரை ஓடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல்பகுதியில் உயரமான இலவம் மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து அடிக்கடி கிளைகள் விழுகிறது. ரோடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. மரம் விழுந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.மரத்தினை அகற்றுவதற்கு ஊராட்சியில் ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இதே கருத்தினை பள்ளி நிர்வாகம் ஆமோதித்து, அகற்றுவதற்கு பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

கனர க வா கனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்

பாலமுருகன், மேல்மங்கலம்: காலை 7:00 மணி முதல் 10:00 வரை, மாலை 4:00 மணி முதல் 6:00 வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் பஸ்ஸ்டாப் பகுதியை அதிகளவில் கடந்து செல்கின்றனர். அப்போது குவாரி கிரசரில் இருந்து வெளியேறும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த நேரங்களில் காமக்காபட்டி வழியாக பைபாஸ் வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும். சோத்துப்பாறை, வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்தை தவிர்த்து, வைகை அணையிலிருந்து நேரடியாக ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை