கம்பு விளைச்சல், விலையும் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
போடி: போடி பகுதியில் கம்பு பயிர் விளைச்சலும் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.போடி அருகே சில்லமரத்துப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, அம்மாபட்டி கோணாம்பட்டி,, ராசிங்காபுரம், பொட்டிபுரம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கம்பு சாகுபடி செய்துள்ளனர். கம்பு பயிருக்கு ஜூன், ஜூலை, ஆக., மாதம் சீசனாகும்.கம்பு விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு கம்பு விலை அதிகரித்தும் சீதோஷ்ண நிலை காரணமாக போதிய விளைச்சல் இல்லை. கடந்த ஆண்டு துவக்கத்தில் குவிண்டால் (100 கிலோ) ரூ. 2500 வரை இருந்தது. அதன் பின் ஜூலையில் ரூ. 2600 முதல் ரூ.2700 வரை விலை போனது. இந்த ஆண்டு விளைச்சல் மட்டும் இன்றி விலையும் அதிகரித்து உள்ளது. தற்போது குவிண்டால் ரூ.2450 முதல் ரூ.2500 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில் : கம்பு உணவை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். சத்து மாவு தயாரிக்க பல்வேறு நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் சம்பளம் உயர்ந்த நிலையில் கம்புக்கு போதிய விலை இருந்தால் மட்டுமே கட்டுபடியாகும். தற்போது குவிண்டால் ரூ.2500 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு விளைச்சலும் போதிய விலையும் உள்ளதால் மகிழ்ச்சிதான் என்றனர்.