காலிபிளவருக்்கு விலை இல்லாததால் செடிகள் அழிப்பு; மாற்று பயிருக்கு தயாராகும் விவசாயிகள்
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே விளைந்த காலிபிளவருக்கு விலை கிடைக்காததால் செடிகளை டிராக்டர் மூலம் அழித்து விட்டு மாற்று பயிருக்கு விவசாயிகள் நிலங்களை தயார் படுத்துகின்றனர்.ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம், அரப்படித்தேவன்பட்டி, கண்டமனூர், உட்பட வைகை ஆற்றின் கரையோர கிராமங்களில் காலிபிளவர் சாகுபடி உள்ளது. இங்கு விளையும் காலிபிளவர் ஆண்டிபட்டி, தேனி, மதுரை மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. நடப்பு பருவத்தில் காலிபிளவர் விளைச்சல் அதிகம் உள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. முகூர்த்த சீசன் குறைவால் கிலோ காலிபிளவர் ரூ.10 விலை விற்றது. பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுகளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் காலிபிளவர் பறிப்பதை விவசாயிகள் தவிர்த்தனர். சில விவசாயிகள் காலிபிளவர் செடிகளை டிராக்டர் மூலம் அழித்து விட்டு மாற்றுப் பயிருக்கு நிலத்தை தயார்படுத்துகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: ஒரே நேரத்தில் விவசாயிகள் பலரும் காலிபிளவர் பயிரிட்டதால் விளைச்சல் அதிகமானது. விலை கிடைக்காததால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போதுள்ள செடிகளில் இன்னும் சில வாரங்களுக்கு காலிபிளவர் பறிக்க முடியும். நஷ்டத்தை தவிர்க்க செடிகளை அப்புறப்படுத்தி மாற்று பயிர் மூலம் விவசாயத்தை தொடர விளைநிலங்களை தயார் படுத்துகின்றனர் என்றனர்.