உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 8 ஆயிரம் டன் மாம்பழம்:பறிக்காமல் வீணாகும் நிலை விற்பனைக்கு கலெக்டர் உதவிட விவசாயிகள் கோரிக்கை

8 ஆயிரம் டன் மாம்பழம்:பறிக்காமல் வீணாகும் நிலை விற்பனைக்கு கலெக்டர் உதவிட விவசாயிகள் கோரிக்கை

தேனி: 'பெரியகுளம் பகுதியில் விளைந்துள்ள 8 ஆயிரம் டன் மாம்பழங்கள் விலைகுறைத்து கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளால் விவசாயிகள் பாதிக்கப்படடுள்ளனர். இதனால் மாம்பழங்கள் பறிக்காமல் மரங்களிலேயே விடப்பட்டு வீணாகிறது. மாம்பழங்களை விற்பனை செய்ய கலெக்டர் உதவிட வேண்டும்,' '' என பெரியகுளம் விவசாயி கண்ணன் கோரிக்கை வைத்தார். தோட்டக்கலைத்துறை மூலம் தீர்வு காணப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.தேனியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, உதவி வன பாதுகாவலர் ஷெசில்வில்பர்ட், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் அரவிந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:தங்கமலை, விவசாயி, தும்மக்குண்டு: மேகமலை ஊராட்சி தும்மக்குண்டு பகுதியில் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. அதில் 10 முறைக்கும் மேல் மின்தடை ஏற்படுகிறது. மின்சாரம் கிடைக்காமல் சிரமப்படுகிறோம்.பொது நேர்முக உதவியாளர்: முழுநேர மின்சாரம் கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.அங்குசாமி, கண்டமனுார்: ஆறு ஏக்கர் பரப்பளவிலான கண்டமனுார் ஜமீன் குளம் ஆக்கிரமிப்பில் உள்ளது.இதை அகற்ற மனு அளித்தேன் ஆக்கிரமிப்பு அகற்ற பி.டி.ஓ.,, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.கலெக்டர்: நில அளவை உதவி இயக்குனர் அப்பகுதியை அளந்து தகவல் அளிக்க வேண்டும்.கண்ணன், விவசாயி பெரியகுளம்: தமிழகத்தில் மா உற்பத்தியில் பெரியகுளம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்காததால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, மாம்பழங்களை மிகக்குறைந்த விலைக்கு கேட்டு விவசாயிகளை நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனர். இதனால் அறுவடைக்கு தயாரான மாம்பழங்கள் 8 ஆயிரம் டன் மரங்களிலேயே அழுகி கீழே விழும் அவலம் தொடர்கிறது. மாம்பழங்களை விற்க கலெக்டர் உதவிட வேண்டும்.வெற்றிவேல், விவசாயி, அகமலை: மா விவசாயிகளை வியாபாரிகள் நெருக்கடிக்கு ஆளாக்கி குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்து கின்றனர். இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதனால் கலெக்டர் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகளுக்கு அரசு மூலம் மா பழங்களை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கலெக்டர்: தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து மாம்பழங்கள் வீணாகாமல் தடுத்து, விற்பனை செய்து விவசாயிகள் லாபம் ஈட்ட உதவிட வேண்டும். மேலும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.சீனிராஜ், மாவட்டத் தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் ஒரு லிட்டர் பால் ரூ.50க்கு கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழி கிடைக்கும்.சித்ராதேவி பெரியகுளம்: 2025ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க வேண்டும். மேலும் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயனாளிகளை அதிகரிக்க வேண்டும். இவர்களுக்கு உபகரணங்களை வழங்க வேண்டும் இவ்வாறு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
ஜூன் 23, 2025 10:42

மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தால் போதாது. மாநில அரசு இதனை செயல் படுத்த வேண்டும். விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும். மக்களுக்குபயன் தராத , வெற்று இலவசங்களையும் சுய விளம்பரங்களையும் தவிர்க்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை