குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து நகையை கொள்ளையடித்த ஐவர் கைது
தேனி: வீரபாண்டி அருகே இரு வாரங்களுக்கு முன் குழந்தை கழுத்தில் கத்தி யை வைத்து 14.5 பவுன் நகை, பணம் ரூ.10ஆயிரம் கொள்ளை அடித்த வழக்கில் 5 பேரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நாகாசிட்டி பிளாட் பகுதியை சேர்ந்தவர் போதுமணி 45, கூலித்தொழிலாளி. இவர் மகன், மருமகள், மகளுடன் வசித்து வந்தார். ஜூன் 13 அதிகாலை மங்கி குல்லா அணிந்திருந்த முகமுடி கொள்ளையர்கள், சுவர் ஏறி குதித்து போதுமணி வீட்டிற்குள் புகுந்தனர். பூட்டப்படாத கதவை தள்ளி உள்ளே சென்றனர். அங்கிருந்த போதுமணி உள்ளிட்டோரை தாக்கினர். அப்போது போதுமணியின் ஒன்னரை வயது பேரனின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.4.35 லட்சம் மதிப்பிலான 14.5 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.10ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். போதுமணி புகாரில் வீரபாண்டி போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடினர். பழனி செட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீஸ் குழுவினர் முகமுடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட தேனி பழைய ஜி.எச்.,ரோடு பிரவீன்குமார் 24, வீரபாண்டி ஹைஸ்கூல்தெரு லெனின்குமார் 22, கடலுார் மாவட்டம், வண்டிபாளையம் சிவாநகர் முருகன் 41, திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் முகமதுரபீக் 30, போடி முத்துமணி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.