உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏல விவசாயிகளுடன் அரசு கைகோர்த்து நிற்கும் கேரள நீர்வளத் துறை அமைச்சர் பேச்சு

ஏல விவசாயிகளுடன் அரசு கைகோர்த்து நிற்கும் கேரள நீர்வளத் துறை அமைச்சர் பேச்சு

கம்பம், : இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களை ரிசர்வ் பாரஸ்ட்டாக மாற்றும் முயற்சியில் ஏல விவசாயிகளுடன் அரசு கைகோர்த்து நிற்கும் என கேரள நீர்வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.இடுக்கி மாவட்டத்தில் பீர்மேடு, தேவிகுளம், நெடுங்கண்டம் தாலுகாக்களில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.எனவே மத்திய வர்த்தகம் மற்றும் வேளாண் அமைச்சகங்கள் 3 தாலுகாக்களை கார்டமம் ரிசர்வ் என்று அறிவித்துள்ளது. ஏலக்காய் சாகுபடியில் தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஏலத்தோட்டங்களில் விவசாயி ஒவ்வொருவருக்கும் அரசு நிலம் குத்தகைக்கு வழங்கி உள்ளது. இவை 75 ஆண்டுகளுக்கு முன் திருவாங்கூர் மகாராஜா காலத்தில் பெற்றது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலங்களின் உரிமை தொடர்பாக கேரள வருவாய் துறைக்கும், வனத்துறைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. வனத்துறை நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நிலுவையில் உள்ளது.கேரள சட்டசபையில் சமீபத்தில் வனப்பரப்பு தொடர்பாக வனத்துறை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் மூணாறு,கோட்டயம் வனக் கோட்டத்தில் கார்டமம் ஹில்ஸ் ரிசர்வில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 677 ஏக்கர் ரிசர்வ் பாரஸ்ட் பகுதிக்குள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏலத்தோட்டங்கள் முழுவதும் வனப்பகுதிகளாக காட்டப்பட்டது.

விவசாயிகள் பயப்பட வேண்டாம்

ஏலத்தோட்டங்களை ரிசர்வ் பாரஸ்ட்டாக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ததற்கு ஏல விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஏல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நெடுங்கண்டத்தில் செப். 23 ல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் பேசுகையில் , உச்ச நீதிமன்றத்தில் ஏல விவசாயிகளை காக்க பிரமாண பத்திரம் கேரள அரசு தாக்கல் செய்ய உள்ளது.வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் மாநில அரசிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கார்டமம் ஹில்ஸ் ரிசர்வ் நிலங்கள் குறித்து ஏல விவசாயிகள் பயப்படத் தேவையில்லை. இடுக்கி மாவட்டத்தில் வனப்பரப்பு அதிகரிப்பதை அனுமதிக்க மாட்டோம். ஏல விவசாயிகளுடன் கேரள அரசு கைகோர்த்து நிற்கும். இப்போதுள்ள நிலையே தொடரும் என்றார். மார்க்சிஸ்ட், காங். உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள், ஏல விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !