மூலிகை செடிகள் வழங்கும் திட்டம்; செயல்படுத்த நடவடிக்கை தேவை
கம்பம்; மூலிகை தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுபச்சிலை, பிரண்டை, கீழாநெல்லி உள்ளிட்ட மூலிகை செடிகள் ஹெர்பல் கார்டன் திட்டம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்டது. இவற்றுடன் ஆடாதொடை, கற்றாழை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா என ஒரு தொகுப்பாக 20 மூலிகை செடிகள், 10 செடிகள் வளர்க்கும் பைகள் , 10 கிலோ மக்கிய தென்னை நார் கழிவு, 4 கிலோ மண்புழுஉரம் மற்றும் தொழில் நுட்ப கையேடு வழங்கப் பட்டது. மொத்த விலை ரூ.1500யை 50 சதவீத மானியத்தில் ரூ.750 க்கு வழங்கினார்கள். பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். நிறைய வீடுகளில் இன்றைக்கும் அந்த மூலிகை செடிகள் உள்ளன. ஆனால் 2 ஆண்டுகளாக மூலிகை செடிகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், '2 ஆண்டுகளுக்கு முன் மூலிகை செடி வழங்கினோம். தற்போது எலுமிச்சை, நெல்லி, சப்போட்டா, மா, வாழை கன்றுகள் தரும் திட்டம் உள்ளது,' என்றனர். மூலிகை செடிகள் மருத்துவ குணம் கொண்டது. இவற்றால் சிறு சிறு உடல் உபாதைகளை சரி செய்து கொள்ள பயன்படும். எனவே மூலிகை செடிகள் வழங்கும் திட்டத்தை தோட்டக்கலைத் துறை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.