தெப்ப பராமரிப்பை நிறைவு செய்து தெப்பத்திருவிழா நடத்த வலியுறுத்தல் ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை தேவை
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலுக்கு சொந்தமான தெப்ப பராமரிப்பு பணிகளை நிறைவு செய்து தெப்பத் திருவிழா நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமாகும். ராகு, கேது பரிகார தலமாகவும் உள்ளது.கோயில் திருப்பணி வேலைகள் நடந்து கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்பே தெப்ப பராமரிப்பு பணிகளும் துவங்கப்பட்டது. இக்கோயிலிற்கு சொந்தமான தெப்பம் கோயிலிற்கு எதிரில் உள்ளது. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தும், தெப்ப பராமரிப்பு பணிகள் முழுமை அடையாமல் கிடப்பில் போடப்பட்டது.உத்தமபாளையத்தில் அனைத்து சமூகத்தினமும் இணைந்து ஓடாமல் 50 ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைத்திருந்த தேரை, புதுப்பித்து தேரோட்டம் நடத்தினார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவு பெற்றவுடன் தெப்பத் திருவிழா நடைபெறுவது மரபு.ஆனால் ஓடாத தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்தியும், தெப்பத் திருவிழாவை நடத்த முடியவில்லை.அரசின் பங்களிப்பு மற்றும் உபயதாரர்களை கொண்டு தெப்ப பராமரிப்பு பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கி , அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மாசியில் தேரோட்டம் நடத்த அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களை அழைத்து செயல் அலுவலர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.அதற்குமுன் தெப்பத்தை பராமரித்து குறிப்பாக தெப்பத்தில் மைய மண்டபம் கட்டி , தேரோட்டம் நிறைவு பெற்றவுடன் தெப்பத் திருவிழா நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தமபாளையத்தில் தெப்பத் திருவிழா எந்தாண்டு நடந்தது என்பது தெரியாத நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.