உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்; சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் தேவை

கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்; சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் தேவை

--கொடைக்கானல் வனக்கோட்டம், தேவானப்பட்டி சரகத்திற்கு உட்பட்டது கும்பக்கரை அருவி. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி, கும்பக்கரை பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. ஆண்டின் பல மாதங்கள் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து உள்ளதால் கொடைக்கானல், மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள், சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி விடுமுறை நாட்கள், கோடை விடுமுறைகளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.நுழைவு வாயிலில் இருந்து அருவி வரை 400 மீ., தூரம் உள்ளது. இங்கு செல்ல பேட்டரி கார் பயன்பாட்டில்இருந்த நிலையில் மேடான பகுதியில் பேட்டரி கார் செல்ல திணறியது. இதனால் பல நாட்கள் சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி தள்ளும் நிலை உருவானது. பேட்டரி கார் அடிக்கடி பழுதாவதால் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமப்படும் வயதில் மூத்தவர்களை விட்டு விட்டு, அருவி பகுதிக்கு நடந்து செல்கின்றனர். வனத்துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகள் சென்று வர ஜீப் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ வடகரை ஊராட்சி நிர்வாகம் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்கிறது. ஆனால் பயணிகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்வதில்லை. இங்குள்ள கண்டெய்னர் கழிவறை கூட பராமரிப்பு இன்றி மோசமாக உள்ளது.

மூலிகை வனத்திற்கு பூட்டு

இங்குள்ள மூலிகை வனம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இங்குள்ள அரியவகை மூலிகை மரங்கள், மூலிகைச் செடிகள் முன்பு பராமரித்து வந்த நிலையில் தற்போது பராமரிப்பின்றி இதுவும் பூட்டப்பட்டுள்ளது. அருவி மேற்பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கு உபகரணங்களுடன் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.

'புதர் மண்டிய டிரக்கிங் பாதை'

கும்பக்கரையில் இருந்து கொடைக்கானல் செண்பகனூர் வரை 20 கி.மீ., தூரம் மலையேற்ற பயிற்சிக்கான டிரக்கிங்3பாதை உள்ளது. இரு புறங்களிலும் மரம், செடி கொடிகளிடையே செல்லும் பாதை பிருந்தாவனம் போன்று முன்பு பயன்பாட்டில் இருந்த டிரக்கிங் பாதையில் தற்போது முட்புதர்கள் வளர்ந்து இடையூறாக உள்ளது. மலையேற்ற பயிற்சியால் வனத்துறைக்கு நல்ல வருவாய் ஏற்படும். டிரக்கிங் செல்ல பலரும் டிக்கெட் கேட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இயற்கையின் கொடையான கும்பக்கரை அருவியை முறையாக பராமரித்து அடிப்படை வசதி, சிறுவர் பூங்கா, மூலிகை வனம் ஆகியவற்றை சீரமைப்பு செய்திட வேண்டும். இதற்காக வனத்துறை கும்பக்கரை அருவிக்கு போதிய பராமரிப்பு நிதி ஒதுக்கி சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி