நெடுஞ்சாலையில் தற்காலிக ஓட்டல்களை ஆய்வு செய்வது... அவசியம்:சபரிமலை சீசனுக்காக அதிகரித்துள்ள கடைகள்
கூடலூர்: சபரிமலை சீசனுக்காக நெடுஞ்சாலையில் தற்காலிக கடைகள் அதிகரித்துள்ள நிலையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியமாகும்.சபரிமலை மண்டல பூஜைக்காக நவ.16 மாலையில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் திண்டுக்கல்- தேனி நெடுஞ்சாலை வழியாகவே அதிகம் செல்கின்றனர். பக்தர்களுக்காக தேனியில் இருந்து லோயர்கேம்ப் வரை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் ஐயப்ப பக்தர்களுக்காக தற்காலிக கடைகள் அதிகம் துவக்கப்பட்டுள்ளது. அதில் ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே நெடுஞ்சாலையில் இருந்த பல அசைவ ஓட்டல்கள் சீசன் துவங்கியதுமே சைவ ஓட்டல்களாக மாறியுள்ளன. சபரிமலை சீசனுக்காக துவக்கப்பட்ட கடைகளில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தபின் விற்பனை செய்வதற்கு அனுமதி தர வேண்டும். ஆனால் எவ்வித ஆய்வுமின்றி ஏராளமான கடைகள் துவக்கப்பட்டுள்ளன. நீண்ட தொலைவில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் பயணம் செய்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.அதிகாரிகள் மெத்தனம்
தேனி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள்ஆய்வு மேற்கொள்வதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். சில ஊர்களில் அதிகாரிகள் இன்றி பொறுப்பு அதிகாரிகள் பணி செய்து வருகின்றனர். இதனால் முழுமையான ஆய்வு மேற்கொள்ள முடிவதில்லை. தற்போது சபரிமலை சீசனுக்காக ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைவ ஓட்டல்களாக மாறிய அசைவ ஓட்டல்களில் உணவுப் பொருள் தயாரிக்கும் இடத்தை முழுமையாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புதுராஜா, தலைவர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம், கூடலுார்.