பட்டாசு கடைகள் அருகே வெடிக்க அனுமதிக்க கூடாது பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட அறிவுறுத்தல்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் பட்டாசுகடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில், உரிமம் பெற்ற இடத்தில் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். பட்டாசு பெட்டிகள் ஏற்றும் போதும், இறக்கும் போதும் கவனமாக கையாள வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் இருந்து பட்டாசு பெட்டிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. பட்டாசு கடைகள் அருகில் புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். சட்டவிரோத பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. அதிக ஒளி, ஒலி எழுப்பக்கூடிய வகையிலான பட்டாசுகள் விற்க கூடாது. உள்ளூர் தீயணைப்புத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் புனித தலங்கள், மருத்துவ மனைகள், கல்வி வளாகங்கள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. சிறுவர்கள் பெரியவர்கள் துணையுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். பாதுகாப்பானமுறையில் தீபாவளி கொண்டாட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் பிரேம்குமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ், பட்டாசுகடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.