தேக்கடியில் மாயமான கண்காணிப்பு கேமரா தமிழக அதிகாரிகளின் புகாரில் விசாரணை
கூடலுார்:தேக்கடி தமிழக நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மாயமான சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.தேக்கடியில் உள்ள தமிழக நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் தமிழக அதிகாரிகள் சார்பில் கடந்த வாரம் நுழைவுப் பகுதி, தேக்கடி ஷட்டர் பகுதியில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதற்கு கேரள வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அகற்ற வலியுறுத்தியது. இந்நிலையில் இரவில் அடையாளம் தெரியாத நபர்களால் கேமரா வைத்திருந்த கம்பம், கேமராக்கள், ரிசீவர் உள்ளிட்ட உபகரணங்கள் மாயமானது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் குமுளி போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான கேரளபோலீசார் விசாரணை மேற்கொண்டனர்.தமிழக விவசாயிகள் கூறும்போது:தேக்கடியில் தமிழக நீர்வளத்துறையினரின் அலுவலகம், குடியிருப்புகள் உள்ளன. மேலும் தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர் பகுதியும் உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கவும் அப்பகுதியில் தமிழக நீர்வளத்துறையினர் டிச.,19ல் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். முன்னதாக அதற்கு கேரள வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பெரியாறு புலிகள் வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் மாயமானது ஆச்சரியப்பட வைத்துள்ளது. கண்காணிப்பு கேமராவை அகற்றியது யார் என்பது குறித்து உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.