பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு பிரிவை... துவக்கலாமே; அரசாணை வெளியிட்டும் நடைமுறைக்கு வராத நிலை
கம்பம் : ''அறிவிக்கக் கூடிய நோய்' என பாம்பு கடியை அறிவித்து அரசாணை வெளியிட்டு, சுகாதாரத்துறை சிறப்பு கவனம் செலுத்திய பின்பும், அதனால் எவ்வித பயனும் இல்லாமல், உயிரிழப்பு அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பாம்புக்கடி விஷமுறிவு சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவுகளை அமைக்க சுகாதாரத்துறை முன்வர வேண்டும்'' என கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக அரசு பாம்புக்கடியை ''அறிவிக்கக்கூடிய அல்லது அறிவிக்க வேண்டிய நோய்'' (Notifiable Disease) என்று கடந்தாண்டு அறிவித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடந்த 5 ஆண்டுகளில் பாம்புக்கடி சிகிச்சை பெற்றவர்கள், உயிரிழந்தவர்கள், பாம்புக்கடிக்கான காரணம், பாம்பின் வகைகள், விஷத்தன்மை குறித்தும் விபரங்கள் கண்டறியப்பட்டன. சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'அரசாணை வெளியிட்டு 10 மாதங்களை கடந்தும் பயனில்லாத நிலையே தொடர்கிறது. பாம்புக் கடிக்கு பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை தவிர்த்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கு சிகிச்சை தர பயப்படும் நிலை டாக்டர்களிடமே உள்ளதாக குற்றம் சாட்டும் உள்ளது. குறிப்பாக கம்பத்தில் விஷ முறிவு சிறப்புப் பிரிவு இருந்தும், பாம்புக் கடியால் வருபவர்களை உடனே அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு பரிந்துரைப்பது தொடர்கிறது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பாம்பு கடி சிகிச்சை தொடர்பான பயிற்சி 2 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து முதலுதவி மட்டுமே தரப்படுகிறது. முழு அளவிலான சிகிச்சை தருவது இல்லை. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பாம்பு போன்ற உயிரினங்களின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் குடியிருப்பு பகுதிகள், கழிவு நீர் ஓடைகள் வழியாக மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு பாம்புகள் வர துவங்கி உள்ளன. எனவே பாம்புக் கடி சிகிச்சைக்கு என, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த சிகிச்சைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றனர்.