கம்பம் நகராட்சியில் 90 லட்சம் லி., கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டம் கலெக்டரின் அனுமதி கோரி கடிதம்
கம்பம்: கம்பத்தில் தினமும் சேகரமாகும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த கலெக்டரின் அனுமதி கேட்டு நகராட்சி கடிதம் கொடுத்துள்ளது.கம்பத்தில் தினமும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீர், நகரில் இருந்து வெளியேறி வீரப்ப நாயக்கன்குளத்தில் சங்கமமாகிறது. அந்த கழிவு நீரையே பாசனத்திற்கு பயன்படுத்தும் அவலம் உள்ளது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க தற்போது ரூ 20 கோடியில் திட்டம் தயாராகி உள்ளது. கம்பம் வீரப்பநாயக்கன் குளத்தை ஒட்டி 2.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.நகரில் சேகரமாகும் கழிவு நீர் , இங்கு அமைக்கப்படும் பிளாண்டில் சுத்திகரித்து பாசனம், இதர தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நகரில் 5 இடங்களில் தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படும். சுமார் 5 கி.மீ. நீளத்திற்கு நகருக்குள் குழாய்கள் பதிக்கப்படுகிறது.இது தொடர்பாக வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளருக்கு, நகராட்சி இடம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டது.அதற்கு பதிலளித்த செயற்பொறியாளர் அலுவலகம், ' விண்ணப்ப கட்டணம், தொழில் நுட்ப வழிகாட்டுதல் கட்டணம் செலுத்த கூறியது. இதனை தொடர்ந்து ரூ.30,100 நகராட்சி சார்பில் செலுத்தப் பட்டுள்ளது.நீர்வளத்துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கலெக்டரின் அனுமதி கோரி நகராட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. - மேலும் திட்டம் தொடர்பாக நகரில் முழு அளவில் விரிவாக ஆய்வு நடத்தி, மதிப்பீடுகள் தயார் செய்து வழங்க சென்னை தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு மதிப்பீட்டு தொகையில் 1.5 சதவீதம் கட்டணமாக செலுத்த வேண்டும்.இந்த திட்டத்தை செயல்படுத்த நகராட்சி தலைவர் வனிதா, கமிஷனர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.