ஆசிரியர் வீட்டில் 55 பவுன் நகை திருடியவர் கைது
தேனி:தேனி மாவட்டம் சின்னமனுாரில் ஆசிரிய தம்பதி வீட்டில் ரூ.27.75 லட்சம் மதிப்பு 55.5 பவுன் தங்கநகைகள், 40 கிராம் வெள்ளிக்கொலுசு திருடிய பெரியகுளம் முத்துக்குமாரை 30, போலீசார் கைது செய்தனர். சின்னமனுார் ஓடைப்பட்டி ரோடு மின்நகர் ராஜா. இவரது வீட்டின் தரைத்தளத்தில் க.புதுப்பட்டி தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகதீசன், மனைவி புனிதாவுடன் வசிக்கிறார். புனிதா ,ஓடைப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.நேற்று முன்தினம் காலை இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் மதியம் ராஜா, மாடியில் இருந்து இறங்கி வந்தபோது ஆசிரியர் தம்பதியினரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. காலிங் பெல்லை அழுத்திபோது , உள்ளே இருந்து கைலி அணிந்த நபர் வெளியே வந்து காம்ப்வுண்ட் சுவர் ஏறிக்குதித்து ஓடினார்.ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. ஆசிரியர் தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.27.75 லட்சம் மதிப்புள்ள 55.5 பவுன் தங்க நகைகள்,ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 40 கிராம் வெள்ளிக் கொலுசுகள், ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. சின்னமனுார்இன்ஸ்பெக்டர் பாலாண்டி, எஸ்.ஐ., முத்துசாமண்டி தலைமையிலான போலீசார் மர்ம நபரை தேடினர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட பெரியகுளம் வி.ஆர்.பி., நாயுடு தெரு முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் கூறுகையில் ''சம்பவம் நடந்த ஆறு மணி நேரத்தில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், அலைபேசி விபரங்கள் மூலம் முத்துக்குமாரை கைது செய்தோம். அவர் மீது பெரியகுளத்தில் 2013ல் அடிதடி வழக்கு, 2023ல் தேனியில் திருட்டு முயற்சி வழக்கு உள்ளது. அவரிடம் இருந்து 23 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. பெற்றோர் இறந்த நிலையில் முத்துக்குமார் சித்தியிடம் வளர்ந்துள்ளார். இசை குழுவில் ட்ரம் வாசிக்கும் பணி செய்து அவ்வப்போது திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது'' என்றார்.