ஆக்கிரமிப்பில் மங்களக் கோம்பை ஓடை
போடி : போடி அருகே மங்களக் கோம்பை நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து விவசாயம், பிளாட்டுகள் அமைத்து வருவதால் ஓடை இருந்த இடம் தெரியாமல் மறைந்து உள்ளது.போடி அருகே மங்களக் கோம்பை கரடு அடிவார பகுதியில் இருந்து மேலச் சொக்கநாதபுரம் வரை 4 கி.மீ., தூரத்தில் மங்களக் கோம்பை நீர்வரத்து ஓடை அமைந்து இருந்தது. மழைக் காலங்களில் வரும் நீர் ஓடை பகுதியில் பெருக்கெடுத்து வருவதோடு, மேலச்சொக்கநாதபுரம் கண்மாயில் கலந்தது.தற்போது நீர் வரத்து ஓடை பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்தும், பிளாட்டுகளாக மாற்றி வருகின்றனர். இதனால் மங்களக் கோம்பை நீர்வரத்து ஓடை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து உள்ளது. தற்போது ஓடை பகுதியில் மண் அள்ளி கடத்தி வருவதோடு, பிளாட்டுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.ஓடையை முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.