உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவூற்று வேலப்பர் கோயில் சமுதாய கூட கட்டடம் மீட்பு

மாவூற்று வேலப்பர் கோயில் சமுதாய கூட கட்டடம் மீட்பு

ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த சமுதாயக்கூட கட்டடத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து மீட்டு ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை முதல் தேதி நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். அமாவாசை, கார்த்திகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வர். மலைப்பகுதியில் கோயில் அருகே மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் சிறப்பு. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சர்வே எண் 439ல் 1687 சதுர அடி பரப்பில் 2002ம் ஆண்டு எம்.பி., தொகுதி மேம்பாடு திட்டத்தில் பக்தர்கள் வசதிக்காக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. சமுதாயக்கூட கட்டடம் ராசக்காள்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தினர் சமுதாயக்கூடத்தில் கிடைக்கும் வருவாய் பெற்றாலும் கோயிலுக்கு குத்தகையும் செலுத்தவில்லை. சமுதாய கூட கட்டடமும் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. இதுகுறித்து ஹிந்து அறநிலைத்துறை சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.இதனைத் தொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, ஹிந்து அறநிலையத்துறை தாசில்தார் சுருளி, ஆய்வாளர் சடவர்ம பூபதி, கோயில் செயல் அலுவலர் நதியா, கடமலைக்குண்டு வி.ஏ.ஓ., அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் சமுதாயக் கூட கட்டடத்தை அறநிலையத்துறையினர் ராஜதானி போலீசார் பாதுகாப்புடன் தங்கள் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக் கொண்டனர். சமுதாயக்கூட கட்டடம், அதன் சுற்றுப்பகுதிகள் விரைவில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !