உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குருவன்குளம் ஊரணியில் இறைச்சி கழிவுகளால் மாசு கோடாங்கிபட்டியில் மதகை அடைத்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல தடை

குருவன்குளம் ஊரணியில் இறைச்சி கழிவுகளால் மாசு கோடாங்கிபட்டியில் மதகை அடைத்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல தடை

தேனி: கோடாங்கிபட்டி குறவன்குளம் ஊரணியில் இறைச்சி கழிவுகளை கொட்டி மாசுபடுத்துவதால் விவசாயத்திற்கு நீர் செல்ல முடியாத வகையில் மதகை அடைத்து வைத்துள்ளனர். தேனி --போடி ரோடு கோடாங்கிபட்டி மேற்கு நுழைவாயில் பகுதியில் குருவன்குளம் ஊரணி அமைந்துள்ளது. குரங்கணி மலையில் இருந்து வரும் நீர் கொட்டக்குடி ஆற்றில் பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் சிறுஓடை கண்மாய்க்கு நீர்வரத்து செல்கிறது. அக் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர்2.3 கி.மீ., நீளம் வாய்க்கால் மூலம் கோடாங்கிபட்டியில் உள்ள குருவன்குளம் ஊரணிக்கு வந்தடைகிறது. இந்த ஊரணி நிரம்பி கோடாங்கிபட்டி தென்மேற்கு பகுதியில் உள்ள பாசன விவசாயிகள் பயன் பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டம், உயரும். மேலும் ஊரணியின் வடகிழக்குப்பகுதியில் உள்ள மதகு வழியாகவெளியேறும் நீர் வாய்க்கால்களில் சென்று, கோடாங்கிபட்டி கடந்து கொட்டக்குடி ஆற்றில் மீண்டும் கலக்கும். ஆக்கிரமிப்பு அதிகரிப்பு நீர்வளத்துறைக்கு சொந்தமான குருவன்குளம் ஊரணி 7.5 ஏக்கரில் தற்போது 4.6 ஏக்கர் மட்டுமே உள்ளது. அதுவும் புதர் மண்டி ஆகாயதாமரை வளர்ந்துள்ளன. ஊரணியின்முகப்பு முதல் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கோடாங்கிபட்டி ஊராட்சி நிர்வாகம் நீர் வெளியேறும் மதகை கான்கிரீட் கலவையால் அடைத்து வாய்க்காலில் நீர் செல்லாத வகையில் தடை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் ஊரணியின் கிழக்குப் பகுதி வயல்களில் நெல் சாகுபடி விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். காரத்தன்மை அதிகரித்த நீர் இந்த ஊரணியை மீன் குத்தகைக்கு விட்டுள்ளதால் ஏலம் எடுத்த நபர் மீன்குஞ்சு வளர்ப்பிற்காக கோழிக் கழிவுகள்,இறைச்சி கழிவுகளை ஊரணிக்குள் கொட்டுவதாலும், பொது மக்களும், ஊராட்சியும் ஊரணிக்குள் குப்பை கொட்டி வருவதால் ஊரணி நீரின் தன்மையில் காரத்தன்மையாக மாறி மாசுபட்டு நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளும் அருந்த லாயக்கற்றதாக ஊரணி நீர் மாறியுள்ளது. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் மகேந்திரன், கோடாங்கிபட்டி: ஊரணி அதிக பரப்பில் உள்ளது. மதகை ஊராட்சி மூடியதால் தண்ணீர் கிழக்குப் பகுதி வயல்களுக்குசெல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம், நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி முறையாக ஊரணியை துார்வாரி பயன்படுத்த முடியாத நீரை நண்ணீராக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊரணியை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, வேலி அமைத்து நடைபாதை அமைக்கலாம். இதனால் ஊரணியை சுகாதாரமாகவும் பாதுகாக்க முடியும். இறைச்சி கழிவுகளை கொட்ட கூடாது வீரராகவன், கோடாங்கிபட்டி: ஊரணியின்முகப்புப் பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி கொசுத் தொல்லை அதிகரிக்கிறது.தென்றல் நகர் ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஊரணி நீரை மாசாக்கும் இறைச்சி கழிவுகளை கொட்ட ஊராட்சி தடைவிதிக்க வேண்டும். இதுகுறித்து தென்றல் நகர் பொதுமக்கள் ஒன்றிணைந்து அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. ஊரணியை துார்வாரி, நீரை தேக்கிமூடிய மதகை மீண்டும் சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !