ரேஷன் பொருட்கள் வழங்க கோரி மலைக் கிராம மக்கள் தாலுகா ஆபீஸ் முற்றுகை
போடி : போடி அருகே மேலப்பரவு மலைக் கிராம மக்களுக்கு வாகனம் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க கோரி போடி தாலுாகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மேலப்பரவு மலைக் கிராமம். 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ரேஷன், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற ஆற்றை கடந்து 4 கி.மீ., தூரம் உள்ள போடி அல்லது 2 கி.மீ., தூரம் உள்ள முந்தல் கிராமத்திற்கு செல்ல வேண்டும். இவர்கள் ரேஷன் பொருட்கள் பெற ஆற்றை கடந்து பின் ஆட்டோ மூலம் முந்தல் சென்று ரேஷன் பொருட்கள் பல ஆண்டுகளாக வாங்கி வந்தனர். தற்போது ஆற்றை கடக்க பாலம் கட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று ரேஷன் பொருட்கள் வாங்க முந்தலில் உள்ள ரேஷன் கடைக்கு குடும்ப அட்டையுடன் சென்றனர். அங்கு பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவியில் விரல் பதிவு செய்ய அலைபேசி டவர் கிடைக்காததால் பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. ரேஷன் பொருட்கள் வழங்க கோரி கடைக்காரரிடம் மக்கள் முறையிட்டும் வழங்க இயலாது என தெரிவித்து விட்டனர். பல நாட்கள் இது போல சம்பவம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த மலைக் கிராம மக்கள் மாதத்தில் 2 அல்லது 4 நாட்கள் வாகன மூலம் தாங்கள் வசிக்கும் மேலப்பரவு கிராமத்திற்கு வந்து ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என கோரி போடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகர் இல்லை. தாசில்தார் முற்றுகையிட்ட மக்களிடம் அலைபேசி மூலம் பேசி ரேஷன் பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.