உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முல்லைப் பெரியாறு அணை பலம் ஆர்.ஓ.வி., ஆய்வுப்பணி துவக்கம் - முதல் நாளில் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

 முல்லைப் பெரியாறு அணை பலம் ஆர்.ஓ.வி., ஆய்வுப்பணி துவக்கம் - முதல் நாளில் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை பலம் குறித்து ஆர்.ஓ.வி. (Remotely operated vehicle) மூலம் நீரில் மூழ்கியிருக்கும் அணைப்பகுதியை ஆய்வு மேற்கொள்ளும் பணி நேற்று துவங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கேரள அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியதன் பேரில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய ஆராய்ச்சியாளர்கள் செந்தில், விஜய், ஜாலே லிங்கசாமி, தீபக்குமார் சர்மா ஆகியோர் மெயின் அணையில் நீரில் மூழ்கியிருக்கும் பாகங்களை ஆர்.ஓ.வி. மூலம் ஆளில்லா இயந்திரத்தின் உதவியுடன் நேற்று ஆய்வுப் பணியை துவக்கினர். முதற்கட்டமாக இயந்திரத்தை நீருக்கடியில் மூழ்கச் செய்து கண்காணிப்பு கேமரா மூலம் அணையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த படகில், இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது நாளான இன்று (டிச.,23) ஆர்.ஓ.வி.. இயந்திரத்தில் இருந்து டிஜிட்டல் கேமரா மூலம் அணையை படம் பிடித்து அணையின் பலம் குறித்து பரிசோதிக்கப்படும். 1200 அடி நீளமுள்ள பெரியாறு அணை 100 அடி வீதம் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகங்களாக ஆய்வு செய்யப்படும். இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு 100 அடி துாரமும் இரண்டாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்டமாக அணையின் மத்திய பாகத்தில் 10 அடி துார அளவில் ஒவ்வொரு பாகமாக நீருக்குள் அணையின் அடிப்பாகத்தை ஆர்.ஓ.வி. இயந்திரம் மூலம் படம் எடுத்து தொடர்ந்து 12 நாட்கள் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்படும். ஆர்.ஓ.வி. சோதனை என்றால் என்ன அணையில் உள்ள கட்டமைப்பு, அதன் உறுதித் தன்மை குறித்து நீருக்கு அடியில் மூழ்கியிருக்கும் அணைப்பகுதியை ஆய்வு செய்வது ஆர்.ஓ.வி. (Remotely operator vehicle) எனப்படும். அதிநவீன எச்.டி., கேமராக்கள், எல்.இ.டி., விளக்குகள், சோலார் கருவிகள் மூலம் நீருக்கு அடியில் உள்ள அணைப் பகுதியை துல்லியமாக பதிவு செய்து அனுப்பும் திறன் கொண்டது இந்த கருவி. மனிதர்கள் செல்ல முடியாத ஆழமான ஆபத்தான பகுதிகளில் கூட பாதுகாப்பாக துல்லியமாக தகவல்களை சேகரிக்க இந்தக் கருவி உதவுகிறது. அணையின் அடியில் உள்ள சுவற்றின் பகுதி, அதன் இணைப்புகள், நீர் வெளியேறும் குழாய்களில் விரிசல், அரிப்பு உள்ளதா என்பதை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இதேபோன்ற ஆர்.ஓ.வி., ஆய்வு 2011 மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடத்தப்பட்ட பல கட்ட ஆய்வுகளில் அணையின் 85 அடிக்கு கீழ் உள்ள அணையின் அடிப்பாகம் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே 2014ல் உச்ச நீதிமன்றம் அணை பலமாக உள்ளது என தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ