மூணாறில் சுற்றுலா பயணிகளை கவரும் மியூசிக்கல் மவுண்ட்
மூணாறு,: கேரள மாநிலம் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் வண்ணமயமான 'மியூசிக்கல் மவுண்ட்' சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவருகிறது.மூணாறில் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அருகே மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் தாவரவியல் பூங்கா உள்ளது. அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பூக்கள் உட்பட 600க்கும் அதிகமான வகை பூக்களின் ஒரு லட்சம் செடிகள் உள்ளன. தற்போது அஷிலியா, கலண்டலா, மேரி கோல்ட், இம்பேஷியஸ், ரோஜா, ஆந்தோரியம் உட்பட பல்வேறு பூக்கள் பூத்துள்ளன.கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகையை முன்னிட்டு பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 'விண்டர் மியூசிக்கல் நைட்ஸ்' என்ற கலை விழா பூங்காவில் டிச.21ல் துவங்கியது. நாளை நிறைவு பெறுகிறது. அந்நிகழ்ச்சி மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடக்கிறது. மியூசிக்கல் மவுண்ட்
பூங்காவில் பூக்கள், மின் விளக்கு அலங்காரம் ஆகியவற்றை விட தினமும் இரவு 7:00 மணி முதல் 30 நிமிடம் நடக்கும் 'மியூசிக்கல் மவுண்ட்' பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. செயற்கையான நீரூற்றில் மின் விளக்குகள் இசைக்கு ஏற்ப நடனமாடுவது போன்று அமைக்கப்பட்டுள்ள ' மியூசிக்கல் மவுண்ட்' பயணிகளை சொக்க வைக்கிறது. பூங்காவை காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்க்கலாம். பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டிச.21 முதல் நேற்று வரை பூங்காவை 30 ஆயிரம் பயணிகள் ரசித்து சென்றுள்ளனர்.