இரண்டாவது குழந்தை பெற மூன்று ஆண்டுகள் இடைவெளி அவசியம்; குடும்ப நலத்துறை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தயார்
மக்கள் தொகை பெருக்கத்தினால் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்படும். இதுகுறித்து கடந்தாண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்டந்தோறும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்ய குடும்ப நலத்துறையினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் போது, டாக்டர்கள் அவர்களிடம் பேசி, அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்தனர். ஆனால் அதிலும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே பெண்களுக்கு மட்டும் அறுவை சிகிச்சை போதாது என்று, ஆண்களுக்கு 'வாசக்டமி' என்னும் தழும்பில்லாத அறுவை சிகிச்சை செய்ய அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பரிசு தொகைகள் தரப்பட்டன. ஆனால் ஆண்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் இல்லை. இதுகுறித்து டாக்டர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. குடும்ப நலத்துறையின் தீவிர முயற்சிகளால் குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்தது. பின் திடீரென பணிகள் முடங்கியது. குடும்ப நலத்துறையின் இந்த மாற்றத்திற்கு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளின் வேகம் காட்ட வேண்டாம் என்று அரசின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து குடும்ப நலத்துறையினர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் குடும்ப கட்டுப்படு ஆப்பரேஷன்கள் நடந்து வருகிறது. குழந்தை பிறப்பில் ஒரு குழந்தைக்கும், மற்றொரு குழந்தைக்கும், 3 ஆண்டு கால இடைவெளி அவசியம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தை திருமணங்களை தடுக்கவும், அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கவும் அரசு கூறியுள்ளது. இதற்கென சமூக நலத்துறையுடன் இணைந்து குடும்ப நலத்துறை தீவிரமாக களப்பணியாற்ற உள்ளது'' என்றனர்.