UPDATED : டிச 23, 2025 08:09 AM | ADDED : டிச 23, 2025 06:32 AM
தேனி, தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புதிய வகை 'மெட்ராஸ் ஐ' கண் நோய் பாதிப்பால் மாணவர்கள், பெற்றோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்த கண்நோய் 20 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதால் பாதிப்பிற்குள்ளானோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக காலநிலை மழை, வெயில் என மாறி மாறி வருகிறது. தற்போது பனியும் அதிகரித்து உள்ளது. இதனால் சளி, இருமலால் அதிகமானோர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோயால் பலரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மெட்ராஸ் து பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்வலி, கண்வீக்கம் பல நாட்கள் நீடிக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றோர்களும் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் 'மெட்ராஸ் ஐ' ஆல் பாதிக்கப்பட்டுள்னளர். மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு 'மெட்ராஸ் ஐ' பாதித்து சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கண்நோயால் பாதிக்கப்படுவோர் 20 நாட்களுக்கும் மேலாக கண்வலியால் சிரமப்படுகின்றனர். புதிய வைரஸ்யுடன் பாக்டீரியா பாதிப்பு
இது குறித்து கண் டாக்டர் ஒருவர் கூறியதாவது: 'அடினோ வைரஸ்' தாக்கத்தால் கண்வலி பரவுகிறது. தற்போது அடினோ வைரசின் புதிய வகையால் கண்வலி பரவுகிறது. இக் கண்வலி பாதிக்கப்பட்டவர்கள் வைரஸ் பாதிப்புடன், பாக்டீரியல் பாதிப்பும் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்வீக்கம், கண்கள் சிவந்த அறிகுறியுடன், காது பகுதியில் உள்ள நிணநீர் கட்டியில் வலி உணர்கின்றனர். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனை இன்றி சுய மருத்துவம், கடைகளில் மருந்துகள் வாங்கி பயன்படுத்தக்கூடாது. சுய மருத்துவம் செய்து மருத்துவமனைகளுக்கு வரும் போது நோய் பாதிப்பு அதிகரித்து குணப்படுத்துவதற்கு கூடுதல் நாட்கள் ஆகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பொருத்து இவ் வகை கண்வலி குணமாகிறது. நோய் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை பிறர் பயன்படுத்தக்கூடாது. அனைவரும் அடிக்கடி கைக்கழுவதன் மூலம் இவ்வைரஸ் பரவுவதை தவிர்க்க முடியும் என்றார்.