தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தேனி: நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் பலரும் வீட்டிற்குள் முடங்கினர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 'டிட்வா' புயல் தாக்கத்தால் கடற்கரை மாவட்டங்கள் மட்டுமின்றி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.நேற்றும் இடைவிடாது லேசான மழை பெய்தது. இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. நகர்பகுதியில் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ரோடுகளிலும் குறைந்த அளவில் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது. பலரும் குடைபிடித்தவாறு நடந்தும், டூவீலரிலும் பயணித்தனர். சாக்கடைகள் துார்வாரப்படாததால் சில இடங்களில் கழிவு நீருடன், மழைநீர் தேங்கியது.