உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் பள்ளத்தாக்கில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் மகசூல் பாதிப்பு: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர்

கம்பம் பள்ளத்தாக்கில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் மகசூல் பாதிப்பு: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர்

கம்பம்: கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் மகசூல் பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் நெல் சாகுபடி லோயர்கேம்பில் துவங்கி தேனி வரை நீள்கிறது. தற்போது முதல் போகத்திற்கான நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கம்பம் வட்டாரத்தில் 4200 ஏக்கர், உத்தமபாளையம் 2400 ஏக்கர், சின்னமனூர் 3500 ஏக்கர் என கம்பம் பள்ளத்தாக்கில் 10,100 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்று வட்டாரங்களிலும் பெரும்பாலானோர் ஆர்.என்.ஆர். என்ற ரகத்தை சாகுபடி செய்துள்ளனர். சிலர் 509 என்ற வீரிய ஒட்டு ரகம் சாகுபடி செய்துள்ளனர் கம்பம் பகுதியில் மழை நின்றவுடன் அறு வடையை துவங்கலாம் என கருதிய நிலையில் தொடர் மழையால் கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் நெல் வயல்கள் நீரில் மிதக்கிறது. விவசாயிகள் கூறுகையில், சிரமமான நிலையிலும் விவசாயம் செய்து மழையால் அறுவடை செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. நெல் வயல்கள் ஈரமாக இருப்பதால் இயந்திரங்கள் உள்ளே செல்லாது. ஒரு மணி நேரத்திற்கு அறுவடை செய்ய இயந்திரங்கள் ரூ.2800 கட்டணம் வசூலிக்கின்றனர். வயல் ஈரமாகவும், கதிர்கள் சாய்ந்தும் இருந்தால் ஒரு மணி நேரம் என்பது 2 1/2 மணி நேரமாகும். கட்டணம் ரூ.7 ஆயிரமாகும். 50 சதவீத மகசூல் வீணாகும் கனமழை தொடர்வதால் சாகுபடி செய்துள்ள ஆர். என்.ஆர்., ரகம் மழைக்கு தாங்காமல் கதிர்கள் சாய்ந்துள்ளது. இதை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கூடுதல் நேரமாகும். அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்களில் உள்ள நெல் மணிகள் நாளாக நாளாக கருக்க துவங்கி விடும். ஈரத்திற்குள் சென்று அறுவடை செய்தால் பயிர்கள் உதிர்ந்து 50 சதவீத மகசூல் வீணாகும். எனவே மழை நின்று, ஈரம் இல்லாமல் தரை உலர்ந்தால் தான் அறுவடை செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு மழை நிற்பது போல் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதித்துள்ளது. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி, உற்பத்தி குறையும். நிவாரணம் வழங்க வேண்டும் கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், பாசன வாய்க்கால்கள் உடைந்து நெல் வயல்கள் தண்ணீரில் மிதக்கிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை எழுந் துள்ளது. ஒரு வாரம் தாங்கும். அதன் பின் நெல் உதிரத் துவங்கி விடும். இப்போதே பல இடங்களில் முளைக்க துவங்கி விட்டது. ஒட்டுமொத்த மகசூலும் பாதித்துள்ளது. உயர்மட்ட வேளாண் அதிகாரிகள் குழு அல்லது அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்ய அரசு உத்தரவிட வேண்டும். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை