| ADDED : அக் 15, 2025 06:48 AM
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 18 வது வார்டில் வாடகை கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மேற்கூரை தகரத்தில் உள்ளதால் வெயில் காலங்களில் குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். நகராட்சி புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர். பெரியகுளம் நகராட்சி 18 வது வார்டில் வரதப்பர் தெரு, பள்ளத்து தெரு, சித்தீஸ்வரன் கோயில் தெரு, மேதகார படித்துறை தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இப் பகுதியில் ஆயிரத்து ஐநூறு மக்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதி அடிப்படை வசதி குறைபாடு, தேவைகள் குறித்து குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் சி.அகிலாண்டேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி,ரெங்கலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது: பெரியகுளம் நகராட்சியிலிருந்து முன்பு காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையும்,மாலையில் 6:00 மணி முதல் 8:00 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சில மாதங்களாக காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே குடிநீர் வினியோகம் நிறுத்துகின்றனர். இதனால் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறுகலான சந்தின் நடுவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து தொட்டால் 'ஷாக்' அடிக்கும் வகையில் உள்ளது. இதை மாற்ற வலியுறுத்தி மின்வாரியத்திற்கு பல மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தெருவில் ஓடும் பாதாள சாக்கடை சித்தீஸ்வரன் கோயில் சந்தில் வாடகை கட்டத்தில் சிறிய இடத்தில் தகரக்கொட்டகையில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. வெயில் காலத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இதே பகுதியில் நகராட்சி காலி இடம் இருந்தும் அங்கன்வாடி மையம் கட்டவில்லை. இதனால் இரு ஆண்டுகளாக மாதம் ரூ.4 ஆயிரம் வாடகையில் செயல்பட்டு அரசின் நிதி வீணாகி வருகிறது. அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக வீதிகளில் கழிவுநீர் செல்வதால் பெரும் தொந்தரவாக உள்ளது. நகராட்சியில் கழிவுநீர் தூய்மை வாகனத்தை பயன்படுத்தி அடைப்புகளை அகற்ற வேண்டும். போதிய தெருவிளக்குகள் இல்லாததால் பல பகுதிகள் இருளாக உள்ளது. தெருவிளக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தெருநாய் தொல்லை தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. தெருவிற்கு மிக அருகே வராகநதி செல்வதால் கொசு உற்பத்தி தாராளமாக இப் பகுதியில் வாரம் ஒரு முறை கொசு மருந்து தெளிக்க வேண்டும். தொட்டிச்சியம்மன் கோயில் தெருவில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். அருகேயுள்ள வராகநதியில் குப்பை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேதமடைந்த சிமென்ட் கற்கள் வார்டுகளுக்கு உட்பட்ட வீதிகளில் 2005ம் ஆண்டு நகராட்சியில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக் சிமென்ட் கற்கள் சேதமடைந்து ஏற்றம், இறக்கமாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புதிதாக பேவர் பிளாக் கற்கள் அமைத்து தரவேண்டும். மேதகாரப்படித்துறை அருகே வராகநதியில் கழிவுநீர் கலந்து தூய்மையின்றி உள்ளது. படிக்கட்டுகள் குப்பை அள்ளப் படாமல் சுகாதாரமின்றி உள்ளது. இதனை சுத்தம் செய்து சுகாதாரம் பாதுகாத்திட வேண்டும் என்றனர்.