அரசின் கனவு இல்ல திட்ட தவணை தொகை வழங்காமல் இழுத்தடிப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
தேனி: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2ம் தவணை தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் மனு அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில், டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பிற துறை அதிகாரிகள் மனு அளித்தனர். சர்வர் பிரச்னையால் மனுக்கள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. கொடுவிலார்பட்டி வேல்முருகன் மனுவில், 'கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு அமைக்கும் பணி மேற்கொண்டேன். பணம் பற்றாக்குறையால் கடன் வாங்கி வீட்டை கட்டி முடித்தேன். அரசு வழங்க வேண்டிய 2ம் தவணை தொகை ரூ. 75ஆயிரம் இதுவரை வழங்கவில்லை. கடன் வழங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த கூறி வருகின்றனர். எனவே அரசு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும்,' என்றிருத்து. சீலையம்பட்டி ஹவுதியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நஷிர் தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில், 'எங்கள் பகுதியில் இஸ்லாமியர்களுக்கான அடக்கஸ்தலம் சிறிய இடமாக உள்ளது. அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை உள்ளது. கூடுதலாக இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர். உத்தமபாளையம் தாலுகா அய்யம்பட்டி முருகேசன் தலைமையில் கிராம பொதுமக்கள் வழங்கிய மனுவில், அய்யம்பட்டியில் தனியார் மதுபார் வேண்டாம் என முன்னாள் கலெக்டரிடம் மனு அளித்திருந்தோம். அவர் மதுபார் வராது என உறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றோம். தற்போதைய கலெக்டர் பொறுப்பேற்ற போதிலிருந்து மனு அளித்து வருகிறோம். ஆனால், தனியார் மதுபார் திறக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த தனியார் பார் திறப்பதை நிறுத்த வேண்டும்,' என கோரினர். ஓட்டுச்சாவடி மையத்தில் திருத்த முகாம் தேனி நகராட்சி அ.திமு.க., கவுன்சிலர் கிருஷ்ணபிரபா வழங்கிய மனுவில், 'வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்வதில் படிக்காத வாக்காளர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ரூ.100 வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினார்.