மருந்தாளுனர் பணியிடங்கள் காலி மாத்திரை கொள்முதலில் சிக்கல்
கம்பம்: மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ளதால் மருந்து மாத்திரை விநியோகம்,கொள்முதலிலும் சிக்கல் எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் மருந்தாளுநர்கள் 10 பேர்களே பணியில் உள்ளனர். காலிப்பணியிடம் 30 க்கும் அதிகமாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நர்சுகள் மூலம் மருந்து மாத்திரைகள் விநியோகம் செய்கின்றனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, ஆண்டிபட்டி, பெரிய குளம் அரசு மருத்துவமனைகளிலும் தலைமை மருந்தாளுனர்கள் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.மருந்தாளுனர்கள் கூறுகையில், மருந்தாளுநர்கள் பற்றாக்குறை தேனி மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த மாதம் 946 பேர்களை மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் தேர்வு செய்தனர். அவர்களை மருத்துவ கல்வி இயக்கம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி விட்டனர். பொதுச் சுகாதாரத்துறைக்கு அனுமதிக்கவில்லை. இதனால் கிராமங்களில் மருந்து மாத்திரைகள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 350 பேர்கள் தேர்வு செய்ய உள்ளதாகவும், அதில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியுள்ளனர் என்றனர்.