உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

அண்ணியை அவதுாறாக பேசியவர் கைது பெரியகுளம்: தென்கரை, சாய்பாபா கோயில் தெரு ரவீந்திரன் மனைவி லட்சுமி 45. ரவீந்திரன் பூர்வீக சொத்தை ரூ.5 லட்சம் கிரையம் பேசி 2022ல் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.1.50 லட்சம் வழங்கியும், ரவீந்திரன் தம்பியான தாமரைக்குளம் நாச்சாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாபு 57,விற்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளார். பத்திரம் முடிப்பதற்கு கையெழுத்து போடும் போது பாபுவிற்கு பாக்கித்தொகையை தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாபு ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ரவீந்திரன் இறந்தார். இவரது மனைவி லட்சுமி சொத்தை எழுதிதரும்படி கேட்டபோது, பாபு மட்டும் கிரையம் செய்து தர முடியாது, பணத்தையும் கொடுக்க முடியாது என லட்சுமியை மதுபோதையில் அவதூறாக பேசியுள்ளார். தென்கரை போலீசார் பாபுவை கைது செய்தனர். மணல் திருடிய டிராக்டர் பறிமுதல் ஆண்டிபட்டி: எஸ்.ஐ.மணிகண்டன் மேக்கிழார்பட்டி கூத்தமேடு பெரிய ஓடை அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் டிராக்டரில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அரசு அனுமதியின்றி மணலை திருடியதாக ஒப்புக்கொண்டவர்கள் திடீரென்று அங்கிருந்து ஓடி தலை மறைவாகி விட்டனர். கால் யூனிட் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டர் உரிமையாளர் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். புகையிலை பதுக்கியவர் கைது தேனி: வீரபாண்டி போலீசார் பூமலைக்குண்டு, காமாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். மலைக்குண்டு கிழக்குத்தெருவிக்னேஷ்கண்ணன் 26, தனது பெட்டிக்கடையில் விற்பனைக்காக ரூ.1984 மதிப்புள்ள 3720 கிராம் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்ற இருவர் கைது ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு எஸ்.ஐ. பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். குமணன்தொழு ரோட்டில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 10 கிராம் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவர்கள் கரட்டுப்பட்டியை சேர்ந்த மூர்த்தி 26, குமணன் தொழுவைச் சேர்ந்த குபேந்திரன் 35, இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் உறுதியானது. விசாரணையில் குமணன் தொழு ஆனந்திடம் வாங்கி வர இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.9200 , டூவீலர் பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தி, குபேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். ஆனந்தை தேடி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் முன் அடிதடி தேனி: சிவாஜிநகர் ஜெயசுதா 45. இவரது மருமகன் தினேஷ்பாண்டிக்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பான விசாரணைக்கு வந்த ஜெயசுதாவை, மருமகன் தினேஷ்பாண்டி, அவருடன் வந்த திவ்யா, பால்பாண்டி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயசுதா புகாரில், மூவர் மீதும் வழக்கு பதிந்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர். லாரி மோதி விவசாயி காயம் தேனி: போடி ரெங்கநாதபுரம் விவசாயி மணிகண்ணன் 50, இவர் நண்பருடன் தேனிக்கு சென்றார். பழனிசெட்டிபட்டி அருகே சென்றபோது மதுரை புளியங்குளம் பள்ளம் முத்துக்கருப்பன் 38, அஜாக்கிரதையாக லாரியை திருப்பினார். அப்போது லாரி டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்ணன் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்தவர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். விஷபூச்சி கடித்த மூதாட்டி பலி தேனி: ஜங்கால்பட்டி பார்வதி 65. இவர் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளுக்கு தீவனம் வைத்தார். அப்போது ஏதோ பூச்சி கைவிரலில் கடித்தது. அவரை மகன் ஈஸ்வரன் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பார்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈஸ்வரன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக் கின்றனர். கணவர் மாயம்: மனைவி புகார் தேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் 42. இவரது கணவர் சந்தனபாண்டி 44. மூன்று பிள்ளைகள் உள்ளனர். சந்தனபாண்டி வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பாண்டியம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ