உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க தபால்துறை அழைப்பு

கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க தபால்துறை அழைப்பு

தேனி, : தபால்துறை நடத்தும் 'தாய் அஹார்' எனும் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்,' என, தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்தார்.இளைய தலைமுறையினர் இடையே கடிதம் எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்யவும், இன்றைய இளம் இந்தியாவின் சிந்தனைகளை சேகரிக்கும் நோக்கத்திலும் இந்திய தபால் துறையின் சார்பில் 'தாய் அஹார்' என்ற கடிதம் எழுதும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2024க்கான கருப்பொருளாக எழுதுவதின் மகிழ்ச்சி, - டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பை அறிவித்துள்ளது. இக்கடிதமானது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மொழிகளில் எழுதப்பட வேண்டும்.'ஏ 4' பேப்பரில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லேண்ட் கடிதத்தில் (ஐ.எல்.சி.,) 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தலைமை தபால்துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கையால் எழுதிய கடிதங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் தலை ஒட்டிய கவர் வைத்து அனுப்பப்பட வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவில் முதல் மூன்று கடிதங்கள் தேர்வு செய்து பரிசுத் தொகை வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.இப்போட்டிகள் டிச., 14 வரை நடக்க உள்ளது. டிச., 14க்கு பின் வரும் கடிதங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது. கூடுதல் விபரங்களுக்கு தேனி தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 04546 - 254843 என்ற எண்ணிலும், விற்பனை அதிகாரியை 99763 54800 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை