ரோடு சீரமைக்காததால் விழுந்து காயமடையும் பொதுமக்கள் மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நிதி இல்லை என நழுவும் அவலம்
தேனி: போடி ஒன்றியம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில் ரோடு வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். ரோடு அமைக்க நிதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் நழுவுவதாக அப்பகுதி பொதுமக்கள் குமுறுகின்றனர்.மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டி, மஞ்சிநாயக்கம்பட்டி கிராமங்களை உள்ளடக்கி 7 வார்டுகள் உள்ளன. இதில் மஞ்சிநாயக்கன்பட்டியில் முத்துநகர் அமைந்துள்ளது. இங்குள்ள் முத்துநகரில் 2 தெருக்கள் உள்ளன. 40 வீடுகளில் 200க்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இரு தெருக்களிலும் ரோடு அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் அளவீடு செய்து சென்றனர். ஆனால், ஒரு தெருவில் மட்டும் அரைகுறையாக ரோடு, சாக்கடை அமைத்தனர். மற்றொரு தெருவில் இதுவரை ரோடு, சாக்கடை பணிகள் துவங்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அமைத்த ரோடும் பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மேலே தெரியும் வகையில்தரமின்றி அமைக்கப்பட்டுள்ளது.சமுதாய கூடம் அமைந்துள்ள தெருவில் ரோடு அமைக்க கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தும் பலனில்லை. நிதி இல்லாததால் ரோடு அமைக்க முடியவில்லை. ரோடு அமைக்கும் பணிக்காக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக மட்டும் பல மாதங்களாக கூறி இழுத்தடிப்பு செய்வதாக புலம்புகின்றனர். சொந்த செலவில் சீரமைப்பு
முருகேஸ்வரன், விவசாயி, முத்துநகர்: குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளில் பொதுமக்கள் தடுமாறி விழுகின்றனர். வயதானவர்கள் பலர் தடுமாறி காயமடைந்துள்ளனர். மழைகாலங்களில் மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறுகிறது. டூவீலரில் செல்வோர் மழைநேரத்தில் அதிகம் விழுந்து பாதிப்பிற்குள்ளாகின்றனர். முதியவர்கள் அழைத்து செல்வதில் சிரமம் உள்ளது.வீடுகளுக்கு முன் சொந்த செலவில் ரோடு சீரமைக்கும் அவல நிலை தொடர்கிறது. விரைவில் ரோடு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கும் கழிவு நீர்
முருகலட்சுமி, முத்துநகர்: இந்த தெருவில் கழிவு நீர் சாக்கடை வசதி இல்லை. இதனால் ஆங்காங்கே வீடுகளுக்கு அருகே கழிவு நீர் தேங்கும் அவல நிலை உள்ளது. மழைகாலங்களில் வீடுகளை கழிவு நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. கழிவு நீர், மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.இதனால் இப்பகுதில் பலரும் கொசுக்கடியால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகுகின்றனர். ஊராட்சி சார்பில் சாக்கடை வசதியுடன் கூடிய ரோடு, கொசுமருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.