உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெயரளவில் செயல்படும் உழவர் சந்தைகள் மூடுவிழாவிற்கு தயார் ; எளிதில் வந்து செல்லும் இடத்திற்கு மாற்றிட வலியுறுத்தல்

பெயரளவில் செயல்படும் உழவர் சந்தைகள் மூடுவிழாவிற்கு தயார் ; எளிதில் வந்து செல்லும் இடத்திற்கு மாற்றிட வலியுறுத்தல்

போடி: தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேவாரம் உழவர் சந்தைகளில் ஒரிரு கடைகள் பெயரளவிற்கு செயல் படுவதால் இவற்றிற்கு மூடுவிழா நடத்த தயாராகி வருகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்று இடத்தில் அமைக்காததால் தினசரி மார்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்குவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். விவசாயிகள் விளை பொருட்களை நேரடி விற்று லாபம் பெறும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் போடி, தேனி, கம்பம், சின்னமனூர், தேவாரம், பெரியகுளம், ஆண்டிபட்டியில் தலா 40 கடைகளுடன் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன. இதில் தேனி, கம்பம், சின்னமனூரில் மட்டுமே தினசரி செயல் படுகின்றன. மற்ற ஊர்களில் உழவர் சந்தை அமைந்துள்ள இடங்களுக்கு மக்கள் எளிதில் சென்று வர முடியாததால் வியாபாரம் இன்றி பெயரளவில் ஒரிரு கடைகளுடன் செயல்படுகின்றன. இரு கடைகளுடன் உழவர் சந்தை : போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே நகராட்சி காய்கறி மார்க்கெட் இடம் காலியாக இருந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே இடம் இருந்தும் டி.வி.கே.கே., நகரில் மக்கள் எதிர்ப்பை மீறி உழவர் சந்தை அமைக்கப்பட்டது. துவக்கத்தில் கடைகள் முழுவதும் செயல்பட்டன. நகரின் மையத்தில் தினசரி மார்க்கெட் இருந்ததால் உழவர் சந்தைக்கு மக்கள் செல்வதை தவிர்த்தனர். இதனால் கடைகள் எண்ணிக்கை குறைந்து, ஓரிரு கடைகளுடன் விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் விற்கின்றனர். தற்போது பெயரளவிற்கு இரு கடைகளுடன் செயல்படுகிறது. மற்ற கடைகள் குடோன்களாக மாறி உள்ளன. உழவர் சந்தையை பஸ் ஸ்டாண்ட் அருகே மாற்றிட இடம் தேர்வு செய்தும் வேளாண் வணிக துறை ் நடவடிக்கை இன்றி கிடப்பில் உள்ளது. தற்போது உழவர் சந்தை வளாகம் முட்புதர் வளர்ந்துள்ளன வாரம் ஒரு நாள் உழவர் சந்தை : தேவாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள உழவர் சந்தை ஆரம்பத்தில் கிராம மக்கள் தினமும் காய்கறிகளை வாங்கி சென்றனர். முறையாக செயல்பட அதிகாரிகள் முயற்சி எடுக்காததால் தற்போது திங்கள் கிழமை மட்டும் வியாபாரிகள் வந்து விற்பனை செய்கின்றனர். வளாகத்தில் கடைகள் இருந்தும் பெரும் பாலானோர் வெளியே வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். பெரியகுளம், ஆண்டிபட்டியில் உழவர் சந்தை தொலைவில் அமைந்துள்ளதால் பெயரளவுக்கு ஓரிரு கடைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் மூடுவிழாவிற்கு தயாராகும் நிலை உள்ளன. போக்குவரத்து வசதி, மக்கள் எளிதில் சென்று வரும் இடங்களில் உழவர் சந்தையை மாற்றிட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை