பிரேத பரிசோதனை அறிக்கை 40 நிமிடங்களில் வழங்கி சாதனை
மூணாறு : இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகா மருத்துவமனை நிர்வாகம் பிரேத சோதனை அறிக்கையை 40 நிமிடங்களில் வழங்கி சாதனை படைத்தது.அந்த மருத்துவமனையில் சமீபத்தில் தடயவியல் துறை டாக்டராக ஆதர்ஷ் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். அதன்பிறகு பிரேத பரிசோதனை மூலம் இறப்புக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து ஒரு சில நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை 40 நிமிடங்களில் வழங்கி சாதனை படைத்தனர்.பீர்மேடு அருகே சின்னார் 4ம் மைல் பகுதியை சேர்ந்த மோனிச்சன் 54, நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உப்புத்தரா போலீசார் மேல் நடவடிக்கை எடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு பீர்மேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் ஆதர்ஷ்ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. அதன் அறிக்கை 40 நிமிடங்களில் போலீசாரிடம் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.