அ பதிவேட்டில் தவறான பதிவால் பட்டா பெற சிரமம் குடியிருப்போர் சங்கத்தினர் மனு
தேனி: தேனி அருகே அ,ஆ பதிவேட்டில் தவறுதலாக பதிவேற்றியதால் உட்பிரிவு செய்து பட்டா பெறமுடியவில்லை இதற்கு தீர்வு காண கோரி கலெக்டர் அலுவலகத்தில் வடபுதுப்பட்டி ராதாகிருஷ்ணன் குடியிருப்போர் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியகுளம் தாலுகா, வடபுதுப்பட்டி ஊராட்சி ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்போர் சுப்பிரமணி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'குடியிருக்கும் பகுதியில் பிளாட்டுகளாக பிரித்து பல ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பிளாட்கள் பிரிப்பதற்கு முன் நில ஆவணங்களை அ, ஆ பதிவேட்டில் தவறாக பதிவேற்றி உள்ளனர். இதனால் குடியிருப்பில் வசிப்பவர்களால் பட்டா பெற முடியவில்லை. பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் பட்டா உட்பிரிவு கோரி பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கவில்லை. ஆவணங்களை சரியாக பதிவேற்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க',கோரினர். ஹிந்து முன்னணி நிர்வாகி கார்த்திக் தலைமையில் ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் வழங்கிய மனுவில், 'ஆட்டோ கட்டணம் 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரை உயர்த்தப்படவில்லை.ஆந்திராவில் செயல்படுத்தியது போல் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும்,' என்றிருந்தது.