ரோடு துண்டிப்பு: நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதி
கூடலுார்: கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரால் கூடலுார் தாமரைக்குளம் நுனிக்கரை ரோடு துண்டிக்கப்பட்டது. விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். கூடலுார் தாமரைக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக சாகுபடிக்காக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பயிர்கள் வெளியே தெரியாத வகையில் குளம் போல் காட்சியளித்தன. தேங்கியிருந்த தண்ணீர் மேலும் அதிகரித்த போது நுனிக்கரை செல்லும் ரோட்டில் வெளியேறி ரோடு முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் கூடலுாரில் இருந்து நுனிக்கரை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றமுடியாத நிலை ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட ரோட்டின் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியே செல்வதால் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.