ரோட்டோரக் கடைகள் அகற்றம் கட்சியினர் வாக்குவாதம்
மூணாறு: கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் தாவரவியல் பூங்காவின் எதிரில் உள்ள ரோட்டோரக் கடைகளை அகற்றுவது தொடர்பாக வருவாய்துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான பகுதிகளில் உள்ள ரோட்டோரக் கடைகளை பேரிடர் மேலாண்மை சட்டப்படி அகற்றுமாறு கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டார். அதன்படி கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் அரசு தாவரவியல் பூங்கா எதிரே உள்ள கடைகளை மூணாறு சிறப்பு தாசில்தார் காயத்ரிதேவி தலைமையில் வருவாய் துறையினர், நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நேற்று காலை அகற்றும் பணியை துவக்கினர். ஒரு சில கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூணாறு பகுதி செயலாளர் ஈஸ்வரன் உள்பட அக்கட்சியினர் கடைகளில் உள்ள பொருட்களை அகற்ற கால அவகாசம் வழங்கக்கோரி கோரிக்கை வைத்தனர். அதனால் வருவாய்துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி பொருட்களை அகற்ற நேற்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கினார். அதன்பிறகு கட்சியினர் கலைந்து சென்றனர். கடைகள் அகற்றும் பணி இன்று (அக்.31) தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.