உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணுடன் பழகி 40 பவுன் மோசடி; பள்ளி டிரைவர், காதலியுடன் கைது

பெண்ணுடன் பழகி 40 பவுன் மோசடி; பள்ளி டிரைவர், காதலியுடன் கைது

பெரியகுளம்; விவாகரத்து பெற்ற பெண்ணுடன் வாழ்ந்து ஒரு குழந்தை பெற்று 40 பவுன் நகையை மோசடி செய்த பிரபாகரன் என்பவரை மற்றொரு கள்ளக்காதலியுடன் போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பொன்னையா தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 36. திருமணம் ஆன இவர் திருப்பூரில் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்தார். திருப்பூர் காடையூர் ஆளபிச்சான் புதூரைச் சேர்ந்த சாந்திதேவி 36,க்கு மகள், மகன் உள்ளனர். சாந்தி தேவி மகனை பள்ளிக்கு அழைத்து வரும் போது பிரபாகரனுக்கும் சாந்திதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கணவரை விவாகரத்து செய்து விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக பிரபாகரன் கூறியுள்ளார். இதனை நம்பி சாந்திதேவி அவரது கணவரை விவாகரத்து செய்தார். இரு குழந்தைகளையும் தனது பெற்றோரிடம் விட்டு விட்டு 40 பவுன் நகைகளுடன் வந்த அவரை பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் தங்க வைத்து பிரபாகரன் குடும்பம் நடத்தினார். இதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து சாந்திதேவியிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான 40 பவுன் தங்க நகைகளை வாங்கிய பிரபாகரன் அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவி விஜயா 37, என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு சாந்திதேவியை வீட்டை விட்டு வெளியேற்றினார். 40 பவுன் நகையை சாந்திதேவி கேட்டுள்ளார். இதற்கு பிரபாகரன், விஜயா இருவரும் சேர்ந்து சாந்திதேவியை அடித்து, 'மீண்டும் நகை கேட்டு வந்தால் உன்னையும், குழந்தையையும் கொலை செய்துவிடுவேன்,' என கொலை மிரட்டல் விடுத்தனர். சாந்திதேவி புகாரில், பிரபாகரன், விஜயாவை பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி